×

11,240 அடி உயர பனி மலையில் இருந்து விழுந்த இந்திய மலையேற்ற வீரர் ஆயுசு கெட்டி: உயிரை காப்பாற்றியது ஹெல்மெட்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 11,240 அடி உயர மலையில் இருந்து விழுந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையேறும் வீரர், அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி மலையேறும் வீரர் குர்பாஸ் சிங் (16). இவர் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பிரபல ஹூட் பனி மலையில் மலையேற்றத்திற்காக தனது குழுவினருடன் சென்றார். இது குர்பாஸின் 90வது மலையேற்றமாகும். கடந்த செவ்வாயன்று மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்த குர்பாஸ், 11,240 அடி உயர உச்சியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனால், அவரது குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

எப்படியாவது தனது கையில் உள்ள கொக்கி போன்ற பிடிமானத்தின் மூலமாக அவர் எங்காவது நின்று விடுவார் என குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் பனிமலையில் உருண்டு சென்றதால் அவர்கள் நம்பிக்கையை இழந்தனர். இதனை தொடர்ந்து, மீட்பு குழுவினர் மூலமாக குர்பாசை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர், ஆச்சரியப்படும் வகையில் சுமார் 500 அடி உயரத்தில் பனிமலையின் மேடான பகுதியில் குர்பாஸ் சிக்கி இருந்தார். உடனே, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை மலையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பல மணி நேரங்களானது.

பின்னர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 11,240 அடி உயரத்தில் இருந்த விழுந்தபோதும் குர்பாசுக்கு கால் முறிவு மட்டுமே ஏற்பட்டு இருந்தது. அவர் நல்ல உடல் நலனோடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  தலைக்கவசம் அணிந்து இருந்ததே தான் உயிர் பிழைக்க முக்கிய காரணம் என்று குர்பாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Tags : AYUSU KETTY ,Indian , 11,240 feet, high snow mountain, fallen, Indian trekker, helmet
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...