×

டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டலில் ரூ.50 லட்சம் வாடகையில் லோக்பால் அலுவலகம்: 7 மாதத்தில் ரூ.3.85 கோடி செலவு

புதுடெல்லி: டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில் செயல்படும் லோக்பால் அமைப்பின் அலுவலகத்திற்கான மாதம் ரூ.50 லட்சம் வாடகை செலுத்தப்பட்டு வருவது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கப்பட வேண்டுமென கடந்த 2013ல் லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் மற்றும் 8 உறுப்பினர்கள் கடந்தாண்டு பதவியேற்றனர்.

தற்போது, லோக்பால் அமைப்பின் அலுவலகம் டெல்லி சாணக்கியாபுரியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் வாடகை அறையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கான வாடகை தொடர்பாக அறிய, பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவுக்கு லோக்பால் அமைப்பு அளித்துள்ள பதிலில், ‘லோக்பால் அமைப்பின் அலுவலகத்திற்கான வாடகையாக மாதம் ரூ.50 லட்சம் செலுத்தப்படுகிறது. கடந்த 2019 மார்ச் 22ம் தேதி முதல் அக்டோபர் 31 வரை ரூ.3.85 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் சொந்த அலுவலக கட்டிடத்திற்கு லோக்பால் அமைப்பு மாற இருக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், ‘‘டெல்லியில் உள்ள சர்வதேச மாற்று குறை தீர்ப்பு மையம் (ஐசிடிஏஆர்) வளாகத்தில் லோக்பால் அமைப்புக்கான அலுவலகம் விரைவில் மாற்றப்பட உள்ளது,’’ என்றார். மேலும், லோக்பால் அமைப்பிடம் புகார் அளிப்பதற்கான முறைப்படுத்தப்பட்ட படிவத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரித்துள்ளார்.
லோக்பால் அமைப்பிடம், கடந்த 2019 செப்டம்பர் 20ம் தேதி வரை 1065 புகார்கள் வந்துள்ளன. இதில் 1000 புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, தீர்த்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : star hotel ,Delhi , Delhi, 5 star hotel, Rs 50 lakh rental, Lokpal office, 7 months, Rs 3.85 crore, cost
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு