×

இந்தோனேஷியாவில் மழை வெள்ளத்துக்கு 30 பேர் பலி: பலரை காணவில்லை

ஜகர்தா: இந்தோனேஷியாவில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இந்தோனேஷியாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு  வெளியேறி உள்ளனர். இவர்கள் அரசால் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களும் மழைநீரில் மூழ்கி சேரும் சகதியுமாக காணப்படுகின்றது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சிறிய படகுகள் மூலமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். ஜகர்தா மாவட்டம் தொடர் மழை காரணமாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழையால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மாவட்டத்தில் இருந்த விமான நிலையமும் மூடப்பட்டது. 2013ம் ஆண்டுக்கு பின்னர் ஜகர்தாவை தாக்கிய மிக மோசமான மழை மற்றும் வெள்ளமாக இது கருதப்படுகின்றது.

மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. கிரேட்டர் ஜகர்தாவில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஜவா தீவின் தெற்கு எல்லையின் அருகில் உள்ள லீபாக் பகுதியில் வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த பகுதியில் 8 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஜகர்தாவில் நிலச்சரிவில் 8 வயது சிறுவன் மற்றும் 82வயது முதியவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


Tags : floods ,Indonesia , 30 killed,Indonesia ,floods,many missing
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்