×

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்ட 3 கோடி குடும்பங்களை 5 முதல் சந்திக்கிறது பாஜ

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளிக்க, 3 கோடி குடும்பங்களை சந்திக்கும் திட்டத்தை வரும் 5ம் தேதியில் இருந்து பாஜ தொடங்குகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவியது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்ட பாஜ தீவிரமாக களமிறங்க உள்ளது. இதற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இதில், மிஸ்டு கால் மூலம் பொதுமக்கள் குடியுரிமை சட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

இது தவிர, வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை 10 நாட்களுக்கு பிரமாண்ட பிரசார இயக்கத்தையும் நடத்த பாஜ திட்டமிட்டுள்ளது. இந்த 10 நாட்களில் ஏற்கனவே அறிவித்தப்படி 3 கோடி குடும்பங்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் திட்டத்தை அது தொடங்குகிறது.   
இது குறித்து பாஜ பொதுச் செயலாளர் அனில் ஜெயின் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வரும் 5ம் தேதி பிரமாண்ட பிரசார இயக்கத்தை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார். இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை கட்சியின் அனைத்து தலைவர்களும் நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணி, பிரசாரங்கள் மேற்கொள்வார்கள்,’’ என்றார்.

இந்நிலையில், வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ‘‘குடியுரிமை சட்டம், என்ஆர்சி தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கம் அளிக்க உள்ளோம். மத ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை எந்த விதத்திலும் மாற்றிடாது’ என்றும் விளக்கம் அளிப்போம்,’’ என்றார்.

சொத்து பறிமுதல்: உபி அரசு 7 நாள் கெடு
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து ₹50 லட்சம் நஷ்டஈடு வசூலிக்கப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். அதன்படி, 150 பேருக்கு சொத்து பறிமுதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விளக்கமளிக்க 7 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பதிலளிக்க தவறினால், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காங். தலைவர்கள் விலகல்
கோவாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரசை சேர்ந்த 4 தலைவர்கள், அக்கட்சியில் இருந்து நேற்று விலகினர். பனாஜி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பிரசாத் அமோன்கர், சிறுபான்மை பிரிவுகளை சேர்ந்த தினேஷ் குபால், சிவ்ராஜ் தர்கர், ஜாவித் ஷேக் ஆகியோர் விலகினர். இவர்களில் 3 பேர் பாஜவில் இணைந்தனர்.

Tags : Baja ,families , Baja , 3 crore families, raise support,Citizenship Act
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...