×

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் பெரும் விபத்து தவிர்ப்பு: நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை- மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணியளவில், காட்பாடியில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து கோரக்பூர் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, விரிசலை காலை 5.50 மணியளவில் தற்காலிகமாக சரி செய்தனர். அதன்பின், நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டு சென்றன. தண்டவாள விரிசலால் சுமார் ஒன்றரை மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உரிய நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட  விரிசலை ஊழியர்கள் கண்டறிந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : railway track ,Arakkonam ,passengers , Arakkonam, Railway, Cracks, Accident Avoidance, Midway, Travelers
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...