×

திமுக வென்றதை அதிமுக வென்றதாக அறிவிப்பு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திமுக எம்பி, எம்எல்ஏ போராட்டம்: கலெக்டர், டிஆர்ஓ ஓட்டத்தால் பரபரப்பு

சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்ற இடங்களை அதிமுக வென்றதாக அறிவிக்கப்பட்டு வருவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் திமுக எம்பி, எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை 20 மையங்களில் நடந்தது. இதன் முடிவுகள் அறிவிப்பதில், தாமதம் ஏற்பட்டது. மதியம் 1 மணி வரையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வென்றவர்களின் விவரங்களை அறிவிக்கவில்லை. பின்னர், 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வென்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில், 13ல் அதிமுகவும், 3ல் திமுகவும் வென்றதாக தெரிவித்திருந்தனர்.

மேலும், 20 மையத்திலும் திமுக வென்ற இடங்களை அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்ததாக அந்தந்த மையங்களில் திமுகவினர் போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்எல்ஏ (மத்தியம்), எஸ்.ஆர்.சிவலிங்கம் (மேற்கு), கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டிராஜா மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ராமனிடம் புகார் கூற கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால், அவர்கள் வருவதை அறிந்த கலெக்டர் ராமன், டிஆர்ஓ திவாகர் ஆகியோர் அடுத்தடுத்து அலுவலகத்தை விட்டு காரில் வெளியேறினர். இதனால், கலெக்டர் அலுவலகம் வந்த திமுக நிர்வாகிகள், வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி ராஜேந்திரன் எம்எல்ஏ, சிவலிங்கம், எம்பி பார்த்திபன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சங்ககிரி, கொங்கணாபுரம், ஓமலூர் என மாவட்டம் முழுவதும் 20 ஒன்றியத்திலும் திமுக வெற்றி பெற்ற வார்டுகளில் அதிமுக வென்றதாக அறிவிக்கின்றனர். பல வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்தநிலையில் திமுக வென்றதால், முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இரவு வரை முடிவை அறிவிக்காமல் தாமதப்படுத்தி, பின் அதிமுக வென்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, தேர்தல் முடிவை மாற்றி அறிவிப்பது பற்றி புகார் கொடுக்க வந்தால், கலெக்டரும், டிஆர்ஓவும் ஓட்டம் பிடிக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டினர்.

இதையடுத்து மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசனிடம் முறைகேடு புகார்களை திமுகவினர் தெரிவித்தனர். அவர், முறையாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாங்கள் கூறிய புகார்களை கலெக்டரிடம் தெரிவிக்கிறேன் எனக்கூறி திமுகவினரை அனுப்பி வைத்தார். இதேபோல், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

இதையடுத்து, காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார்  கல்லூரி வளாகத்தில் இருந்து வெறியேற்ற முயற்சித்தனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மலர்விழி வந்தார். அவரிடம் திமுகவினர் புகார் தெரிவித்தனர். அவர் விசாரிப்பதாக கலெக்டர் கூறியதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது.


Tags : victory ,DMK ,Salem Collector ,collector ,office ,Salem ,TRO ,MLA , DMK, PM, Announcement, Salem Collector, DMK, MLA, Struggle, Collector, TRO
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!