×

‘பாஸ்டேக்’ குளறுபடிகள் குறித்து அனைத்து மொழிகளிலும் புகார் அளிக்கும் வசதி: வணிக வாகனங்களை இயக்குவோர் கோரிக்கை

சென்னை: இந்தியாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் 47 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை ஒவ்வொரு முறையும் கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் (பாஸ்டேக்) அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த சுங்கச்சாவடியிலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக பிரத்தியேகமாக ‘பாஸ்டேக்’ என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செல்வதற்கு ‘பாஸ்டேக்’ கார்டை பயன்படுத்த வேண்டும். இந்தகார்டானது அனைத்து சுங்கச்சாவடி, சில ஏஜென்சிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அந்த கார்டை வாகனத்தில் கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ரிசார்ஜ் செய்யப்பட்ட கார், எந்த சுங்கச்சாவடியில் நுழைந்தாலும் அப்போது, அங்கு ஒரு இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இயந்திரம் கண் இமைக்கும் ெநாடியில் காரின் வருகையை கண்டறிந்து பதிவு செய்து விடும். பிறகு நாம் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து, அந்த சுங்கச்சாவடியை நாம் பயன்படுத்தியதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு விடும்.

பிறகு அங்கு அமைக்கப்பட்டிரும் தடுப்பு கம்பியும் தானாகவே திறந்து கொள்ளும். ஆனால் இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் டிசம்பர் முதல் அமல்படுத்தப்பட வேண்டிய திட்டம், வரும் 15ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருசில வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட முறையில் சுங்கக்கட்டணத்தை செலுத்த துவங்கி விட்டனர். இவ்வாறு செலுத்தும்போது ஒருசில இடங்களில் பிரச்னைகள் ஏற்படுகிறது. அப்போது அனைத்து மொழிகளிலும் புகார் அளிக்க முடியவில்லை என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கூறியதாவது:‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம், சுங்கச்சாவடிக்கு சென்றதும் தானாக பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைக்காரணம் காட்டும் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளை ரொக்கமாக, கட்டணத்தை செலுத்தச்சொல்கின்றனர். அதன்படி செலுத்தி விட்டு சிறிது தூரம் சென்றதும், அவர்கள் கணக்கில் இருந்தும் சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்கான தொகை கழிக்கப்படுகிறது.

இந்த குளறுபடியால் வாகனஓட்டிகள் இரண்டுமுறை பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதேபோல் ஒருசில இடங்களில் வங்கிக்கணக்கில் இருந்து இரண்டுமுறை பணம் எடுக்கப்படுகிறது. சிலநேரங்களில் பணம் எடுப்பது குறித்த எஸ்எம்எஸ் வருவதற்கு தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. புகார் அளிக்க வேண்டும் என்றால், ஆங்கிலம் அல்லது இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அனைத்து மொழிகளிலும் புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : drivers , All,languages,reporting,facility
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...