×

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூருக்கு கரும்பு வரத்து தொடங்கியது

வேலூர்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு பண்ருட்டியிலிருந்து வேலூர் மார்க்கெட்டிற்கு கரும்பு வரத்து தொடங்கி உள்ளது. ஜனவரி 15ம்தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்கு முக்கிய பொருட்களான கரும்பு, வாழைப்பழம், மஞ்சள்கொத்து, மண்பானை மற்றும் பூ போன்றவை தேவை. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்துள்ளதால் அப்பொருட்கள் உற்பத்தி அதிகளவில் இருப்பதால் விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பன்னீர் கரும்பு வகைகள் அதிக பரப்பில் விவசாயிகள் பயிர் செய்து உள்ளனர். இந்த ஆண்டு உற்பத்தியும் அதிகளவில் இருப்பதால் மார்க்கெட்டில் கரும்பு வரத்து அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் கரும்பு வியாபாரிகள் கூறியதாவது: இந்தாண்டு கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மார்க்கெட்டிற்கு சீர்காழி, பூம்புகார், சிதம்பரம், பண்ருட்டி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் கரும்பை வாங்கி விற்போம். கடந்தாண்டு 15 முதல் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ₹300 முதல் ₹400 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்னும் பொங்கலுக்கு 13 நாட்கள் உள்ள நிலையில் தற்போது முதல் தர கரும்பு ஒரு கட்டு ₹300 முதல் ₹350 வரை விற்கப்படுகிறது. ஆனால் பொங்கலுக்கு முதல்நாள் அன்று கரும்பு கட்டு விலை குறைய வாய்ப்புள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு இலவசமாக பச்சரிசி, சர்க்கரை, 1000 ரூபாயுடன், இரண்டு அடி கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தோட்டக்கலைத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கரும்பு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மார்க்கெட்டிற்கு வர உள்ள கரும்புகள் அவர்கள் எடுத்து கொண்டனர். இதனால் தற்போது, 3 நாட்களுக்கு ஒரு லோடு வருகிறது. பொங்கல் பண்டிக்கைக்கு ஓரிரு நாட்கள் இருக்கும்போது நாள் ஒன்றுக்கு 4 லோடு வரை கரும்பு வர வாய்ப்பு உள்ளது. எனவே பொங்கல் பண்டிகை நாளில் கரும்பு விலை குறையும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Vellore ,Pongal ,festival , Pongal festival
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை