×

தண்டராம்பட்டு அருகே சுடுகாட்டிற்கு இடம் கேட்டு சடலத்துடன் சாலை மறியல்

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே சுடுகாட்டிற்கு இடம் கேட்டு சடலத்துடன் பொதுமக்கள் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் ஊராட்சி காமாசந்தல் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் யாராவது இறந்தால், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பரசுராமன் என்பவர், சுடுகாட்டு நிலம் தனக்கு சொந்தமானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பரசுராமனுக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கிராம மக்கள், சுடுகாட்டிற்கு இடம் கேட்டு தாசில்தாரிடம் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் சே.கூடலூர் கிராமத்தில் அங்கன்வாடியில் உதவி சமையலராக பணிபுரிந்து வந்த பாலம்மாள்(43) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்றிரவு இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால் ஆத்திரமடைந்த பாலம்மாளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் பொற்செல்வன், வானாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசுக்கு சொந்தமான நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக விஏஓ தெரிவித்தார். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அதே கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 1.73ஏக்கர் நிலைத்தை சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பாலம்மாளின் உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : road ,Dandarambattu , Road blockade
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி