×

தினையாகுடியில் கதிர்விடும் நேரத்தில் நெற்பழ நோய் தாக்குதலால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

அறந்தாங்கி: மணமேல்குடியை அடுத்த தினையாகுடியில் கதிர்விடும் தருவாயில் நெற்பழ நோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தினையாகுடி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி கடைமடை பகுதியான தினையாகுடியில் கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் போதுமான தண்ணீர் வராததால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தினையாகுடியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு, கதிர் அறுவடை நடைபெற்றபோதிலும், தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல பகுதிகளில் ஏக்கருக்கு 6 மூட்டை அளவிற்கே நெல் கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

இருந்தபோதிலும், கடந்த ஆண்டு தினையாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் தினையாகுடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்ததாலும், காவிரியில் போதுமான அளவு தண்ணீர் வந்ததாலும், இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொண்டு வந்தனர். தினையாகுடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி எனப்படும் பிபிடி 5204 என்ற நெல் ரகம், தற்போது நெற்கதிர் வெளிவந்த நிலையில், நெல் முற்றுவதற்குள், நெல் கதிர்களில் நெற்பழநோய்(எடப்பழம் நோய் எனவும் விவசாயிகள் அழைக்கின்றனர்)தாக்கியுள்ளது.

இதனால் நெல்மணிகள் முழுதும் பழம்போல பிதுங்கி நிற்கின்றன. மஞ்சள் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் வயல் முழுதும் ஏற்பட்டுள்ளன. நெற்பழ நோய் தாக்கியுள்ள வயல்களில் கதிர் அறுவடை செய்யும் போது 5 சதவீதம் கூட நெல் மகசூல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தினையாகுடியில் நெற்பழ நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Diseases of the day, rice and crops
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...