×

போராட்டம் நடத்துபவர்கள் சிறுபான்மையினர் மீதான பாகிஸ்தானின் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுங்கள்: பிரதமர் மோடி பேச்சு

தும்கூர்: போராட்டம் நடத்துபவர்கள் சிறுபான்மையினர் மீதான பாகிஸ்தானின் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை 107வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தந்துள்ளார். இதற்காக மதியம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆளுநர் உள்பட பலர் வரவேற்றனர். பின்னர் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

அதன்பின்னர் பேசிய மோடி, இந்த புனிதமான நிலத்திலிருந்து 2020ம் ஆண்டைத் தொடங்குகிறேன் என்பது எனது அதிர்ஷ்டம். ஸ்ரீ சித்தகங்க மடத்தின் இந்த புனித ஆற்றல், நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்க விரும்புகிறேன். பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மையினரை அவர்களின் தலைவிதி எப்படியும் போகட்டும் என நாம் விட்டுவிட முடியாது. அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடு. மத சிறுபான்மையினர் அங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். துன்புறுத்தப்பட்டவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை, அந்நாட்டிலிருந்து வந்த அகதிகளுக்கு எதிராக பேசுகிறார்கள்.

நீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள். நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமானால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புங்கள், என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், 21ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் இந்தியா புதிய ஆற்றலுடனும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் நுழைந்துள்ளது. கடந்த தசாப்தம் தொடங்கியபோது நாட்டில் என்ன மாதிரியான சூழ்நிலை இருந்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் இந்த மூன்றாவது தசாப்தம் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளின் வலுவான அடித்தளத்துடன் தொடங்கியுள்ளது என கூறியுள்ளார்.



Tags : Fighters ,Pakistan ,atrocities ,talks ,Pak ,minorities ,protesters ,Modi ,Protest ,Anti-CAA , PM Modi, Karnataka, CAA, Pakistan, Minorities, protest
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...