×

குடியிருப்பு பகுதியில் நுண் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

அறந்தாங்கி: அறந்தாங்கி நகராட்சி சார்பில் குடியிருப்பு பகுதியில் நுண்உரம் தயாரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தின் 2-வது பெரிய நகராகவும், முதல் நிலை நகராட்சியாகவும் விளங்கி வருகிறது. அறந்தாங்கி நகரில் தினசரி சேகரமாகும் குப்பை நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள புதுக்கோட்டை சாலையில் உள்ள கலவை உரக்கிடங்கு வளாகத்தில் கொட்டப்படுகிறது. பின்னர் அந்த குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு, அறந்தாங்கி வாரச்சந்தையில் நகராட்சி சார்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை சாலையில் உள்ள கலவை உரக்கிடங்கில் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் தேங்கின. இதனால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரக் கேடு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்போதைய அறந்தாங்கி நகராட்சி ஆணையராக இருந்த நவேந்திரன், தீவிர முயற்சி மேற்கொண்டு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்காக இயந்திரம் வாங்கினார். பின்னர் குப்பையை தரம் பிரித்து, பிளாஸ்டிக் பொருள்களை அரியலூர் சிமெண்ட் பேக்டரிக்கு வழங்கினார். மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றம் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். அதன்பிறகு குப்பையை முறையாக மேலாண்மை செய்யாததால், தற்போது கலவை உரக்கிடங்கில் மீண்டும் குப்பை பல டன்கள் சேர்ந்துள்ளன. இதனால் கலவை உரக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி செல்வோர் அப்பகுதியில் செல்லும்போது மூக்கை பொத்திக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

புதுக்கோட்டை சாலை கலவை உரக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பை நுண்உரமாக மாற்றம் செய்ய 2018-19 துhய்;மை பாரத இயக்கம் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில், அறந்தாங்கி கோபாலசமுத்திரம் பிருந்தாவனம் பு+ங்கா பகுதியில் நுண் உரம் தயாரிக்கும் மையம் கட்டப்பட்டுள்ளது.
அறந்தாங்கி நகரில் சேகரிக்கப்படும் குப்பை இந்த நுண் உரம் தயாரிக்கும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் இயந்திரத்தில் கொட்டப்ட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படும். பின்னர் மக்கும் குப்பைகளை நுண்உரம் தயாரிக்கும் மையத்தில் கட்டுப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டு நுண்உரம் தயாரிக்கப்படும். குப்பைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டு , நுண்உரம் தயாரிக்கப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் வாய்ப்பு உள்ளது.

கோபாலசமுத்திரம் பகுதியில் குடியிருப்புகள் உள்ளதாலும், நுண்உரம் தயாரிக்கும் மையத்தின் அருகில் நகராட்சி சமுதாயக்கூடம் உள்ளதாலும், எதிரே ரேசன் கடை, அருகே அரசு உதவி பெறும் பள்ளி என மக்கள் மற்றும் மாணவர்கள் நடமாட்டம் அதிகம் பகுதி என்பதாலும், இப்பகுதியில் நுண்உரம் தயாரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் கலவை உரக்கிடங்கு உள்ள நிலையில், அங்கு நுண்உரம் தயாரிக்கும் மையத்தை, அதுவும் முக்கிய நீராதாரமான கோபாலசமுத்திரம் நீரேற்று நிலையம் இருக்கும் பகுதியில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே நுண்உரம் தயாரிக்கும் மையத்தை குடியிருப்பு பகுதியில் அமைக்காமல், அந்த முடிவை மறுபரிசீலணை செய்து கலகை உரக்கிடங்கு பகுதியில் அமைக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூங்கா அமைக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர் மகாராணிஅஜ்மீர்அலி கூறியது: கோபாலசமுத்திரம் நீரேற்று நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. ஆழ்துளை கிணறு உள்ள பகுதியில் குப்பைகளை சேமித்து வைத்து, நுண்உரம் தயாரிப்பதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் சுகாதாரமற்றதாகிவிடும். மேலும் அறந்தாங்கி பேரூராட்சியாக இருந்தபோது, இப்பகுதியில் இருந்த பிருந்தாவனம் பூங்காவை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இன்னும் நிலுவையில் உள்ளது. நகரில் பூங்காவை இல்லாத நிலையில் பிருந்தாவனம் பூங்காகை அமைக்காமல் இப்பகுதியில் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் நுண்உரம் தயாரிக்கும் மையம் அமைப்பது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Set Up Micro Fertilizer Center ,Residential Area Residential Area ,Set Up Public Resistance ,Micro Fertilizer Center , Residential, Micro Fertilizer Center
× RELATED தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100...