×

ஈரானின் வடமேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

தெக்ரான்: ஈரானின் வடமேற்குப் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஈரான் நில அதிர்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளூர் நேரப்படி காலை 7.59 மணியளவில் ஈரானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கன் எல்லையோரத்தில் சன்கன் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஈரானின் புனித மஷ்ஹாத் நகரத்திற்கு தெற்கே 300 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 8 கிலோ மீட்டர், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து பேசிய ஈரானில் உள்ள அவசர உதவிக் குழு, இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

எனினும் நிலநடுக்கத்தினால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. நாடோடி மக்கள் வாழும் மக்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள கால்நடை பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் குழு விசாரித்து வருகிறது, என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சன்கனின் ஆளுநர் ஹொசைன் சஞ்சாராணி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இதுவரை உயிரிழந்ததாக எந்த தகவலும் வரவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தால் கால்நடைகளின் இறப்பு பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு இராக்-ஈரான் எல்லையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : earthquake ,Northwestern Iran , Iran, Earthquake
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்