×

களிமண் கிடைக்காததால் மண் அடுப்புகள் தயாரிப்பு பணி மந்தம்: தொழிலாளர்கள் கவலை

கும்பகோணம்: களிமண் கிடைக்காததால் பொங்கல் பண்டிகைக்காக மண் அடுப்புகள் தயாரிப்பு பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். தமிழர்களின் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையின்போது தமிழர்கள் தங்களுடைய வீடுகளில் மண் பானைகளை வைத்து அதில் வெண் மற்றும் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம்.
இதற்காக புதிய மண் அடுப்புகளையும் வாங்கி அதில் தான் பொங்கலிடுவர். இதையொட்டி கும்பகோணம் பகுதியில் மண் அடுப்புகள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. கும்பகோணம் அடுத்த மாத்தி, மேலகொற்கை, அண்ணலக்கரஹாரம், நாதன்கோயில், பம்பப்படையூர் ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் போதுமான மண் கிடைக்காததால் கிடைத்ததை வைத்து அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழக அரசு, மண்களை அள்ளக்கூடாது என்று தடை விதித்துள்ளதால் அதிக விலை கொடுத்து மண் வாங்கி அடுப்பு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மண்பாண்ட தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.இதே நிலை நீடித்தால் மண்பாண்ட தொழில் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்கைள கணக்கிட்டு உரிய அடையாளங்களை வழங்கி மண் எடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாத்தி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், பொங்கல் பண்டிகையின்போது புதிய மண்பாண்ட அடுப்பில் தான் மக்கள் பொங்கல் வைப்பர். அதற்காக அடுப்புகள் தயாரித்து வருகிறோம். இந்த அடுப்புகள் ரூ.100ல் இருந்து ரூ.200 வரை விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது அரசு மண் எடுக்ககூடாது என்று அறிவித்துள்ளதால் மண் கிடைக்காமல் எனது மகன்களும், நானும் வேறு தொழிலுக்கு சென்று விட்டோம். எனது மனைவி மட்டும் கிடைக்கும் மண்ணில் அடுப்பு செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாத்தி, திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், நாதன்கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்டோர் மண்பாண்டம் செய்து வந்தனர். ஆனால் அரசு மண் எடுப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை இருப்பதால் மண் கிடைப்பது அரிதாகியுள்ளது. வேறு தொழில் தெரியாததால் அனுதியின்றி மண் அள்ளுபவர்களிடம் மண்ணை அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்கள் வந்ததால் மண்ணால் செய்த பொருட்களுக்கு மவுசு இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது இயற்கை உணவுக்கு மாறி வருவதால் மண்பாண்டத்துக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால் மண் தான் கிடைக்கவில்லை. எனவே மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கெடுத்து அடையாள அட்டையை வழங்கி மண் எடுப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் மண்பாண்ட தொழில் முற்றிலும் பாதிக்கும். இதனால் மீதமுள்ள மண்பாண்ட தொழிலாளா–்கள் வேறு தொழிலுக்கு மாறும் அவல நிலை ஏற்படும் என்றார்.

Tags : Soil stoves production slowdown , Clay, earthen stove, mantle
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...