×

திமுக கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி: இந்திய அளவில் இதுவே முதல் முறை!

நாமக்கல்: திமுக கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் 5,000 வாக்குகள் உள்ள 2வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. கருவேப்பம்பட்டி ஊராட்சியை உள்ளடக்கிய இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திருநங்கை ரியாவை(30) மாவட்ட திமுக தேர்வு செய்தது. இதையடுத்து திருநங்கை ரியா, கடந்த டிச.3ம் தேதி திமுக சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார்.

இதையடுத்து, தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்த தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை ரியா பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், மனம் நிறைந்த சந்தோசமாக இருக்கிறது. இதற்கான அனைத்தும் பெருமையும் திமுகாவையே சாரும். அதற்காக நான் திமுகவிற்கும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுடைய பயணம் அதிகாரத்தை நோக்கிய பயணம். இந்த பயணத்தில் திருநங்கை மேயராகவும் இருந்துள்ளனர். அது குஜராத்தில் தான் தமிழகத்தில் இல்லை. முதல்முறையாக இந்த வாய்ப்பு எங்களுக்கு இந்த அரசு அங்கீகாரம் கொடுக்காத சூழ்நிலையில் இந்த பொது சமூகம் எங்களுக்கு முதன் முறையாக அங்கீகாரம் கொடுத்துள்ளனர். அதற்காக நான் முழு மூச்சோடு செயல்படுவேன், என உறுதியளித்துள்ளார்.


Tags : Transgender Party ,India ,election ,government ,DMK ,Transgender ,candidate ,Ria , திமுக கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி: இந்திய அளவில் இதுவே முதல் முறை!
× RELATED இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு...