×

தேனி போலீசார் கந்துவட்டி விடுபவர்களுக்கு சப்போர்ட்’ செய்யலாமா?... கொந்தளிக்கும் பொதுமக்கள்

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் கந்து வட்டி தொழில் செய்பவர்களுக்கு முழு அளவில் உதவியாக செயல்படும் போலீசார், நெருக்கடி நேரத்தில் உதவி செய்ய பணம் கொடுத்தவர்களை மிரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்களின் விநோத போக்கினால், அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் கந்துவட்டி தொழில் செய்பவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களின் முதல் வேலை தங்கள் பகுதியில் உள்ள ஸ்டேஷனில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். சிலர் குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு மட்டும் மாதந்தோறும் மாமூல் கொடுத்தும் வருகின்றனர்.

இதனால் இவர்களிடம் கடன் வாங்கிய யாராவது பெருமளவு வட்டி கொடுத்து விட்டு, அசல் பணத்தை கொடுக்க முடியாமல் தவிக்கும் போது, கந்துவட்டிக்காரர்கள் கடன்பட்டவர்களை வீடு தேடிச் சென்று கடும் நெருக்கடி கொடுத்து அவமானப்படுத்துகின்றனர். அவர்கள் புகார் செய்தாலும் போலீஸ் அதிகாரிகள், ‘நீ ஊரை சுத்தி கடன் வாங்குவ, நான் வந்து உன்ன காப்பாத்தனுமாக்கும், இருக்க சொத்துபத்த வித்து கடன கட்டப்பாரு’என மிரட்டி எப்படியாவது கடனை வசூலித்து கொடுத்து விடுகின்றனர். அதேநேரத்தில் தனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஏதோ ஒரு வகையில் நெருக்கமானவர்கள் நெருக்கடி நிலையில் இருக்கும் போது, ‘உதவிக்கு சிலர் பணம் தருகின்றனர்’. ஆனால் நெருக்கடியில் சிககியவர்களோ பலரிடம் கடன் வாங்கி சிக்கிக் கொண்டு, போலீசாரிடம் சரணடைந்து விடுகின்றனர்.

அப்போதும் போலீசார், உதவிக்கு கடன் கொடுத்தவர்களை, ‘நீ கொடுத்த கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தால், உன் மீது கந்து வட்டி தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விடுவேன்’ என மிரட்டுகின்றனர். இதனால் உதவிக்கு பணம் கொடுத்தவர்கள் பாவம் வேறு வழியின்றி பின்வாங்கி விடுகின்றனர். ஒரே விஷயத்தில் போலீசார் எடுக்கும் இந்த இரட்டை நிலை போக்கினால், மோசடி செய்யும் குணத்துடன் ஏமாற்றுபவர்களும், கந்து வட்டியை தொழிலாக நடத்துபவர்களும் தங்களது தொழிலை அமோகமாக நடத்தி வருகின்றனர். ஆனால் பாவம் இருதரப்பிலும் சிக்கிக் கொள்ளும் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து சில போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, உதவிக்கு பணம் கொடுத்தவர்களும், கடன் நெருக்கடியில் சிக்கியவர்களும் எஸ்பி சாய் சரண் தேஜஸ்விக்கு தமிழ் தெரியாது.

நமது நிலையை எப்படி அவருக்கு புரிய வைக்கப்போகிறோம் என தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், தற்போதைய எஸ்பிக்கு மிக நல்ல முறையில் தமிழ் எழுதவும், பேசவும் தெரியும். உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியை நேரடியதாக சந்தித்து தங்களது பிரச்னைகளையும், போலீசார் ஒரே விஷயத்தில் எடுக்கும் இரட்டை நிலைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டும். எஸ்பிக்கு உண்மை நிலவரம் தெரிந்தால் மட்டுமே அவரால் நடவடிக்கை எடுக்க முடியும். இல்லாவிட்டால் எஸ்பியின் பெயரை சொல்லி போலீஸ் அதிகாரிகள் அப்பாவிகளை மிரட்டுவது தொடரவே செய்யும்’ என்று கூறினர்.

Tags : Theni ,civilians ,police supporters , Theni Police, Kanduwatti
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...