×

சென்னை செல்லும் வழித்தடத்தில் குளறுபடி: நாமக்கல்லில் அரசு விரைவு பஸ் முன்பதிவு மையம் திடீர் மூடல்

நாமக்கல்: நாமக்கல்லில் செயல்பட்டு வந்த அரசு விரைவு பேருந்து முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளது. சென்னை செல்லும் பஸ்சின் வழித்தடம் மாற்றியதால் இந்த குளறுபடி நடந்துள்ளது. நாமக்கல் பேருந்து நிலையத்தில், அரசு விரைவு பேருந்து டிக்கட் முன்பதிவு மையம் இயங்கி வந்தது. இந்த மையத்தை கடந்த சில ஆண்டுக்கு முன் விரைவுபோக்குவரத்து கழகம் மூடி விட்டது. இதையடுத்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு, முன்பதிவு மையம் நடத்த போக்குவரத்து கழக அதிகாரிகள் அனுமதி அளித்தனர். விற்பனையாகும் டிக்கெட்டில் குறிப்பிட்ட கமிஷன் அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த மையத்தின் மூலம்இ தினமும் காலை மற்றும் இரவில் சென்னை, திருநெல்வேலி, திருப்பதி, ராமேஸ்வரம், பெங்களூரு, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்குச் செல்ல ஆன்லைனில் டிக்கட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், நாமக்கல்லில் இருந்து துறையூர் வழியாக இயக்கப்பட்டு வந்த சென்னை செல்லும் பேருந்தின் வழித்தடத்தை, விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்தனர். நாமக்கல்லில் இருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் வகையில், வழித்தடம் மாற்றப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் நாமக்கல்லில் இருந்து துறையூர் வழியாக சென்னைக்கு விரைவுப் பேருந்தை இயக்கினார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மீண்டும் வழித்தடம் மாற்றப்பட்டு, நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம், ராசிபுரம் வழியாக பேருந்து சென்னை சென்றது. ஆனால், இதற்கும் பயணிகள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவில்லை. தினமும் குறைவான நபர்களே இந்த பேருந்தில் சென்னை சென்று வந்தனர்.

இதன் காரணமாக முன்பதிவு மையத்தை நடத்தி வரும் தனியார் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 7 ஆண்டாக முன்பதிவு மையத்தை நடத்தி வந்த தனியார் நிறுவனத்தினர், நேற்று திடீரென மூடிவிட்டனர். இதனால் நேற்று டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு தினமும் 43 தனியார் சொகுசு பேருந்துகள் சென்னை செல்கிறது. டூரிஸ்ட் பர்மிட்  என்ற பெயரில் இவை இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான டிக்கெட் கட்டணம் ஆன்லைனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ800 முதல் ரூ1500 வரை நாமக்கல்லில் இருந்து சென்னை செல்ல டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் நாமக்கல்-சென்னை டிக்கெட் கட்டணம் இஷ்டத்துக்கு எகிறும். இதனால் அரசு பேருந்தை அதிகமான பயணிகள் நாடினர்.

ஆனால் போக்குவரத்து அதிகாரிகள் வழித்தடத்தை தொடர்ந்து மாற்றி வந்ததால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் தனியார் நடத்தி வந்த முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து சென்னை செல்லும் பஸ்களில், அதிக கட்டணம் வாங்குவது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Government shutdown ,Namakkal ,government ,bus stop Government shutdown ,bus stop , Namakkal, Government Fast Bus Reservation Center, Closure
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்