×

சீரியல் கில்லர் ஜோலி ஜோசப் வழக்கு: 1,800 பக்கங்களை கொண்ட முதல் குற்றப்பத்திரிகை..தாமரைசேரி நீதிமன்றத்தில் தாக்கல்!

தாமரைசேரி: கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை வழக்கு தொடர்பாக தாமரைசேரி நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தில் திருமணத்தை மீறிய காதலுக்கு தடையாக இருந்த கணவர், மாமனார், மாமியார், மாமியாரின் சகோதரர், காதலனின் மனைவி, குழந்தைகள் என 14 ஆண்டுகளில் 6 பேரை ஜோலி என்பவர் சையனைடு கலந்த உணவை கொடுத்து கொலை செய்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜோலியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ஜோலிக்கு உடந்தையாக இருந்ததாக கடந்த அக்டோபர் மாதத்தில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ஜோலி தனது முதல் கணவரை கொலை செய்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் தாமரைசேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பதிரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஜோலி ஜோசப்பின் இரண்டு குழந்தைகள் உட்பட 246 சாட்சிகளின் வாக்குமூலங்கள், வழக்கு தொடர்பான 22 ஆவணங்கள், 322 ஆதாரங்களுடன் 1,800 பக்க குற்றப்பத்திரிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜோலியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சயனைடு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், சிக்கன் குழம்புடன் சயனைடை கலந்து ஜோலி தமது கணவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், குற்றப்பத்திரிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கணவர் உயிருக்குப் போராடிய போது தண்ணீர் தந்த ஜோலி அந்த தண்ணீரிலும் சயனைடை கலந்துக்கொடுத்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் சையனைடு கொலை வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை இது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Jolly Joseph, Kozhikode, Cyanide murder, chargesheet
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...