×

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 1929 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1926 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு, விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது.  நேற்று முன்தினம் 118.70 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று  118.63 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 91.30 டிஎம்சியாக உள்ளது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம்  2800 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2900 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறையால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து, அருவிகளின் அழகை கண்டு ரசித்தனர்.


Tags : Mettur Dam Mettur Dam , Mettur Dam, irrigation for irrigation, increase
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு