×

பதவி நீக்க நடவடிக்கையை துரிதப்படுத்த கோவா சபாநாயகருக்கு காங். தலைவர் கடிதம்

பனாஜி: கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை விரைந்து முடிக்க கோரி இம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.
கோவா மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், பாஜ. 17 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால், பெரும்பான்மை கிடைக்காமல், சிறு கட்சிகளின் உதவியுடன் பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 10 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜ.வுடன் இணைந்தனர். இதனால் பாஜ.வின் பலம் 27 ஆக அதிகரித்தது. பாஜ.வில் இணைந்த 10 எம்எல்ஏ.க்களில், சந்திரகாந்த் கவ்லேகருக்கு துணை முதல்வர், இசிதோர் பெர்னான்டசுக்கு துணை சபாநாயகர், ஜெனிபர் மான்செரட்டேவுக்கு வருவாய் அமைச்சர், பிலிப் நேரி ரொட்ரிகசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதனிடையே, கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதங்கர், அரசியலமைப்பு பிரிவு 191(2)ன், 10வது அட்டவணையின் கீழ், காங்கிரசில் இருந்து விலகிய 10 எம்எல்ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்தார். இதன் மீது சபாநாயகர் கடந்த அக்டோபரில் முதல் கட்ட விசாரணை நடத்தினார். இந்நிலையில், 10 எம்எல்ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை  காலம் தாழ்த்தாமல், விரைந்து முடிக்க கோரி, சபாநாயகர் ராஜேஷ் பட்னேகருக்கு இம் மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ்  கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், 10 எம்எல்ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்து ஏற்கனவே 5 மாதங்கள் கடந்து விட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் பலனில்லை. இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்துவதால், 10 எம்எல்ஏ.க்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அனைத்து சலுகைகளையும் தகுதியற்ற முறையில் அனுபவித்து வருகின்றனர். எனவே பேரவைத் தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Goa ,Speaker ,Kang , Speaker of Goa, Kang. Leader, Letter
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு