×

கவர்னர் கிரண்பேடி விளக்கம் புதுச்சேரி அரசுடன் நான் சண்டையிடுவதில்லை

புதுச்சேரி: ‘புதுச்சேரி அரசுடன் உண்மையில் நான் சண்டையிடுவதில்லை’ என்று கிரண்பேடி விளக்கமளித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின்  செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்து கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உண்மையில் நான் சண்டையிடுவதில்லை. நிதி கசிவைதான் தடுக்கிறேன். நிதி திசைமாற்றத்தையும், அரசு பட்ஜெட்டுக்குள் இருப்பதை உறுதி செய்கிறேன். எதிர்க்கட்சிகளை  நான் தூண்டிவிடுவதாக முதல்வர் கூறுவதுபோல், ஒருபோதும் செய்ய மாட்டேன். முழு சுதந்திரத்துடன், அவர்களின் விருப்பத்தின்பேரில்தான் மனு கொடுத்திருக்கிறார்கள். மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாகவும் என்மீது முதல்வர் குற்றம் சுமத்தியுள்ளார். உண்மையில்,  உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசானது தலைமை செயலருக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

சரியான செயல்முறை இல்லாமல், விதிகளுக்கு எதிராகவும் முதல்வரால் பரிந்துரைக்கப்பட்டவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக ஆணையர் பதவிக்கு  தன்னிச்சையாக ஒருவரை நியமிக்காமல், விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு செய்யவே தலைமை செயலருக்கு உள்துறை உத்தரவிட்டுள்ளது. எனது கடிதத்தை குப்பை தொட்டியில்தான் போடவேண்டும் என்று முதல்வர் கூறுவதன் மூலம், அவர் தனது சொற்களை தேர்வு செய்வதில் பலமுறை சிக்கல்களில் மாட்டுவது தெரிகிறது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போட்டி அரசை நடத்துவதாகவும், நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார்.  இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் உள்ளது. தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாக உள்ள நிலையில், இறுதி தீர்ப்புக்காக காத்திருப்பதே நன்மை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : government ,Puducherry ,Karnapedi , Governor Karnapedi's , explanation, fighting , Puducherry government
× RELATED புதுச்சேரியில் ஓடும்...