×

வெங்காயம், பூண்டு விலை தொடர்ந்து புளி விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் விளைச்சல் குறைவால் புளி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் ஏராளமான புளியமரங்கள் இருந்தன. இவை, சாலையை அகலப்படுத்துவதாக கூறி அழிக்கப்பட்டு விட்டன. இருக்கும் சில மரங்களிலும் மழை குறைவு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டை விட தற்போது விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், அருகில் உள்ள ஆந்திர, கேரள மாநிலங்களில் இருந்து புளி வரவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை கொட்டை நீக்கிய புளி கிலோ 60க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை இரு மடங்குக்கு மேல் உயர்ந்து கிலோ 130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் அனைத்து விவசாயங்களும் கேள்விக் குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு 10 கிலோ எடை கொண்ட கொட்டை நீக்கப்பட்ட புளி 600க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் இல்லாததால் ₹1,200க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதை மளிகை கடைகளில் கிலோ 130க்கு விற்கின்றனர். புளி சீசன் இல்லாத காரணத்தால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது’’என்றனர். ஏற்கனவே பூண்டு விலை உயர்ந்துள்ள நிலையில், புளி விலையும் உயர்ந்துள்ளதால், ரசம் வைப்பதிலும் இல்லத்தரசிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புளி விலை உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை சரிந்துள்ளது ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Housewives , prices of onions , garlic , continue to rise, price of leaven , rise
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை… தீபாவளி...