×

அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் பயணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி ஜூன் மாதம் சீனா செல்கிறார்: தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்

சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி வருகிற ஜூன் மாதம் சீனா செல்கிறார். சீனாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள கலாச்சாரம், வர்த்தகம் போன்றவற்றை வலுப்படுத்தவும் அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் நுட்பங்களையும் பார்வையிட்டு அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் கேட்டறிந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள சில தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார்கள். இப்போது இருநாட்டு கலாச்சார உறவுகள், வர்த்தகம், குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பேட்டி அளித்த சீன அதிபர் ஜின்பிங், தமிழ்நாட்டின் கலாச்சாரம் அன்பான உபசரிப்பால் நெகிழ்ந்ததாக வெகுவாக பாராட்டினார்.

சீனா சென்றதும் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சீனா நாட்டு பிரதிநிதிகள் குழுவினர் சென்னைக்கு வந்து தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். அதன்பிறகு தமிழக அதிகாரிகள் குழுவினர் சீனா சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.சீனா மற்றும் தமிழக அதிகாரிகள் சந்தித்து பேசியதை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஜுன் மாதம் சீனா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதற்கான அனுமதியை வழங்கி சுற்றுப்பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உள்ளது. சீனாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள கலாச்சாரம், வர்த்தகம், போன்றவற்றை வலுப்படுத்தவும், அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீனா செல்கிறார். அவருடன் தொழில்துறை அமைச்சர், மற்றும் அரசு துறை செயலாளர்களும் செல்ல உள்ளனர். இதன்மூலம் சீனாவில் உள்ள மிகப்பெரிய செல்போன் நிறுவனங்கள் மற்றும் பட்டு நெசவு நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Tags : trip ,UK ,Dubai ,US ,chief minister ,China ,Tamil Nadu , Following his trip , United States, UK and Dubai, the chief minister , visit China , June
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...