×

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு பிப்.29ம் தேதி வரை தண்ணீர் வருகிறது: மேலும் 3 டிஎம்சி கிடைக்க வாய்ப்பு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு பிப்.29ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட ஆந்திரா சம்மதித்துள்ளது. இதனால், மேலும், 3 டிஎம்சி தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்.25ம் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் செப்டம்பர் 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.இந்த தவணை காலத்தில் 5 டிஎம்சியாவது தமிழகத்துக்கு தர வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில், சென்னை 4 ஏரிகளின் நீர் மட்டம்  உயரவில்லை. குறிப்பாக, 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளில் 6 டிஎம்சி வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை மாநகர் குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தமிழகத்துக்கு  தண்ணீர் திறக்க வேண்டும் என்று சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆந்திர நீர்வளத்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். தற்போது 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 44 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்பதால், பிப்ரவரி 29ம் தேதி வரை தண்ணீர் திறக்க ஆந்திரா சம்மதித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு மேலும், 3 டிஎம்சி கிடைக்க வாய்ப்புள்ளது.இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நிலவரப்படி இதுவரை 3.9 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. தொடர்ந்து தமிழக எல்லைக்கு 381 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Kandaleratu Dam ,Public Works Department , Water , coming to Kandaleratu Dam, Tamil Nadu, till February 29th
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்