×

அண்ணாநகர் டவர் பூங்காவில் காதல் ஜோடிகள் அத்துமீறல்: பொதுமக்கள் முகம்சுழிப்பு

அண்ணாநகர்: சென்னை அண்ணா நகரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் 130 அடி உயர டவருடன் பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த டவரின் மேலே ஏறி சென்று, சென்னை நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம் என்பதால் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இதற்கிடையே இங்கு ஒருசில காதல் ஜோடிகள் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் கடந்த 2011ம் ஆண்டு டவர் மூடப்பட்டது. எனினும், இப்பூங்காவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த டவர் பூங்காவுக்குள் இருக்கும் மரத்தடிகள், புதர் பகுதிகள், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காதல் ஜோடிகள் நாள் முழுக்க அமர்ந்து முகம் சுளிக்கும் வகையில் அருவருப்பான முறையில் சில்மிஷங்களில் ஈடுபடுவதும்  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.

இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடையே  இந்த சம்பவம் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்பூங்காவை ஒட்டிய நடைபாதை மற்றும் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு இருந்தும், போலீசாருக்கு சவால் விடும் வகையில் வழிப்பறி, செயின் பறிப்பு மற்றும் பைக் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து மாநகராட்சி பாதுகாவலர் உள்ளிட்ட பூங்கா துறை அதிகாரிகள் மற்றும் அண்ணாநகர் போலீசில் பலமுறை புகார் தெரிவித்தும், இத்தகைய பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் காதல் ஜோடிகளை அகற்றுவதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே அண்ணாநகர் டவர் பூங்காவில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்களை தடுக்கவும், அங்கு வாகனங்கள் கொள்ளை போவதை தடுக்கவும் பூங்கா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : couples ,tower park ,face-off ,Annanagar ,Annanagar tower park , Romantic couples ,Annanagar tower park, Public , face-off
× RELATED காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்