×

பஸ் பயணத்தின்போது ஏசி பழுது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பஸ் பயணத்தின் போது ஏசி பழுதானதால், டிராவல்சுக்கு ₹30 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்தவர் மதன் சுந்தரம். இவர் கடந்த 2015ம் ஆண்டு தென்காசியில் இருந்து சென்னைக்கு வருவதற்காக தனியார் டிராவல்சில் ஏசி சொகுசு பேருந்து டிக்கெட் பதிவு செய்துள்ளார். இதற்காக ₹1,150 கட்டணம் செலுத்தியுள்ளார். இரவு 7 மணிக்கு பேருந்து நிலையம் வந்துள்ளார். ஆனால் பேருந்தை டிரைவர் இரவு 7.50க்கு தான் எடுத்துள்ளார். பயணம் தொடங்கி 10 நிமிடத்தில் பஸ்சில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிரைவரிடம் தெரிவித்தபோது பஸ்சில் ஏசி வேலை செய்யவில்லை. பழுதாகியுள்ளது என தெரிவித்துள்ளார். எனவே கண்ணாடி முழுவதும் மூடி இருந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்துள்ளனர். அப்போது டிரைவர் மதுரையில் மெக்கானிக் உள்ளார் பழுது பார்த்துவிடலாம் என தெரிவித்துள்ளார். ஆனால், மதுரையில் மெக்கானிக் இல்லை. பின்னர் திருச்சியில் இருப்பார் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிராவல்சிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதன், மதுரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் போலீசார் வேறு பஸ்சை ஏற்பாடு செய்து அழைத்து செல்லுமாறு டிரைவரிடம் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து பஸ் மறுநாள் மதியம் 1 மணிக்கு தான் சென்னை வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதன் சுந்தரம் இழப்பீடு கோரி சென்னை, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளானதற்கு டிராவல்ஸ் நிறுவனம் காரணம் என்பது தெரியவந்துள்ளது. எனவே டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ₹30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Tags : AC ,travelers ,repair travelers ,Consumer Court , Consumer court,orders fines , AC repair ,travelers on bus journey
× RELATED பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்...