×

மீண்டும் அணு ஆயுத பாதைக்கு திரும்புகிறது வடகொரியா உலகுக்கு புதிய ஆயுதத்தை காட்டுவோம்: புத்தாண்டில் கிம் ஜாங் ஆவேச அறிவிப்பு

சியோல்: அமெரிக்கா உடனான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் விரக்தி அடைந்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், புத்தாண்டில் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடகொரியா மீண்டும் அணு ஆயுத பாதைக்கு திரும்புவதாகவும், உலகுக்கு விரைவில் புதிய ஆயுதத்தை காட்டப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். பல்வேறு தடைகளை மீறி அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்த வடகொரியா, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, சமீபகாலமாக உலக நாடுகளுடன் இணக்கமாக இருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதே நேரம், தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டுமென வடகொரியா வலியுறுத்தியது. ஆனால், வடகொரியாவிடம் உள்ள அனைத்து அணு ஆயுதத்தையும் தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே பொருளாதார தடை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக கூறி விட்டது.இதுதொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே சமீபத்தில் நடந்த 4 நாள் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், விரக்தி அடைந்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு பேட்டி அளித்த அவர், ‘2019 டிசம்பருக்குள் முடிவு தெரியாவிட்டால், நாங்கள் புதிய பாதைக்கு செல்ல வேண்டியிருக்கும்,’ என கூறியிருந்தார். அதன்படி, அமெரிக்கா பொருளாதார தடைகளை வாபஸ் பெறாததால் மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தப் போவதாக அவர் புத்தாண்டு நாளில் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘அதிபர் டிரம்ப் முக்கிய சாதனையாக தற்பெருமையாக பேசிக் கொண்டிருக்கும், அணு ஆயுத சோதனைக்கான இடைக்கால தடையில் இனியும் எங்களால் பொறுமை காக்க முடியாது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கு இனி எந்தக் காரணமும் இல்லை. அணு ஆயுத சோதனைகளை நடத்துவது இல்லை எங்களுக்கு நாங்களே எடுத்த கொள்கை முடிவை கைவிடப் போகிறோம். இந்த உலகுக்கு விரைவில் புதிய ஆயுதத்தை காட்டப் போகிறோம். இழிவான நோக்கத்தை நிறைவேற்ற வடகொரியா-அமெரிக்கா பேச்சுவார்த்தையை துஷ்பிரயோகம் செய்ய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதுவரை நம் மக்கள் அனுபவித்த வேதனைக்கும், கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் இது ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையான நடவடிக்கை,’’ என கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  கிம் ஜாங்கின் இந்த அறிவிப்பு கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

இன்னும் நம்புகிறார் டிரம்ப்
அணு ஆற்றலை மேம்படுத்தப் போவதாக வடகொரிய அதிபர் கிம் அறிவித்துள்ளது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘அணு ஆயுதத்தை முற்றிலுமாக கைவிடுவதைப் பற்றி நாங்கள் இருவரும் ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த வார்த்தையை கிம் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். எங்கள் இருவருக்குமே ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. இதுவரை நாங்கள் என்ன செய்தோமோ, அதையே இனியும் செய்வோம்,’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

Tags : North Korea ,Kim Zhang , North Korea , new weapon , world,Kim Zhang announces ,new year
× RELATED வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை