×

ஸ்ரீஹரிகோட்டாவை தொடர்ந்து தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் நிறுவ இஸ்ரோ முடிவு: 2300 ஏக்கர் நிலம் கேட்டு அரசுக்கு வேண்டுகோள்

பெங்களூரு: ‘‘சந்திரயான்-3 விண்கலம் அடுத்த 14 மாதங்களில் விண்ணில் ஏவப்படும். மேலும், தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக  2300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்,’’ என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். இது குறித்து  பெங்களூருவில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த வருடம், நிலவின் தென்  பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2   திட்டம் அமல்படுத்தப்பட்டது.    ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று பிரிவாக சந்திரயான்-2   வடிவமைத்து இருந்தோம். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  அது இன்னும் 7 வருடங்கள் செயல்படும் வகையில் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. அதே  நேரம், லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் நேர்த்தியாக தரையில் இறங்க  முடியவில்லை. இதற்காக, சந்திரயான்-2  தோல்வி அடைந்து விட்டதாக கூறமுடியாது.  சந்திரயான்-2 திட்டம் முழு வெற்றி அடையவில்லை என்றாலும் அதன் மூலம் கிடைத்த  அனுபவங்கள் சந்திரயான்-3 திட்டத்திற்கு பேருதவியாக உள்ளன. சந்திரயான்-3   திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்த நிலையில் அதற்கான பணிகள்  தொடங்கியுள்ளன. சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் மற்றும் ரோவர்  ஆகிய இரண்டு கருவிகள் மட்டும், புதிய தொழில்நுட்பங்களில் இடம் பெறும். இதை தவிர அனைத்தும்  ஏற்கனவே நாம் பயன்படுத்திய நுட்பங்களாகும்.

சந்திரயான்-2 நிலவில் லேண்டர்  தரையிறங்கும் முன்பாக கட்டுப்பாட்டை இழந்தது. அது எப்படி நிகழ்ந்தது என்பதை  நாங்கள் ஆய்வு நடத்தினோம். அத்துடன் லேண்டர் எந்த இடத்தில் விழுந்தது  என்கிற விபரமும் எங்களுக்கு கிடைத்தது. அதுபோல், சென்னையை சேர்ந்த இளைஞர்  சண்முக சுப்ரமணியன் லேண்டர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை  பாராட்டுகிறோம்.  அடுத்த  14 மாதத்தில்  நிலவுக்கு மறுபடியும் சந்திரயான் வரிசையில் மூன்றாவது ஆய்வு கலம் பயணம்  மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுத்துள்ளோம். விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை  செலுத்தும் மையங்களின் தேவை அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டில் புதிய ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகர பட்டிணத்தில் 2300 ஏக்கர் நிலம் தேவை என தமிழக அரசுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளோம். தமிழக அரசு  இதற்கான நிலத்தை அளித்தால்,  அதில் ராக்கெட்  ஏவுதளம் விரைவாக அமைக்கப்படும்.  தூத்துக்குடியில் ஏவுதளம் அமைந்தால் சிறிய மற்றும் நடுத்தர  ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். தற்போது, ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

25 திட்டங்களுக்கு இலக்கு
இஸ்ரோ தலைவர் சிவன் மேலும் கூறுகையில், ‘‘சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் மற்றும் ரோவர்  கருவிகளுக்காக ₹250 கோடி இஸ்ரோ செலவிடுகிறது. விண்ணில் செலுத்துவதற்கான  செலவு ₹364 கோடி உள்பட சுமார் ₹650 கோடி தேவை என இஸ்ரோ  கணக்கிட்டுள்ளது. சந்திராயன்-3, ககன்யான்  மட்டும் இன்றி மொத்தம் 25  திட்டங்களை அமல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது,’’ என்றார்.

4 விமானப்படை வீரர்கள் விண்வெளி செல்ல தேர்வு
சிவன் தனது பேட்டியில் மேலும் கூறுகையில், ‘‘சந்திரயான்-3  திட்டத்தை தொடர்ந்து 2020ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிற  ககன்யான் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.  இந்திய  விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரஷ்யாவில் அடுத்த மாதம் முதல் பயிற்சிகள் தொடங்க உள்ளன. ககன்யான் திட்டத்திற்கு  முன்னோடியாக விண்வெளிக்கு செல்லும் விணகலத்தை பரிசோதனை செய்யும் பணியும்  நடந்து வருகிறது. 2020ல்  ஆளில்லாத விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும்  வகையில் தி்ட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து 2022ல் விண்வெளிக்கு  மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்,’’ என்றார்.


Tags : ISRO ,rocket launchers ,Thoothukudi ,Sriharikota ,government ,rocket launcher , ISRO's decision , rocket launcher, Thoothukudi following ,Sriharikota, government
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...