×

அமராவதி தலைநகரை காக்க 5 கோடி மக்களும் வாருங்கள்: சந்திரபாபு உருக்கமான பேச்சு

திருமலை: ‘‘அமராவதி தலைநகரை காப்பாற்ற மாநிலம் முழுவதும் உள்ள 5 கோடி மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்,’’ என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு அழைப்பு விடுத்தார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடந்தபோது, அமராவதியில் ₹1 லட்சம் கோடி செலவில் பிரமாண்ட தலைநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இத்திட்டத்தை மாற்றி, மூன்று இடங்களில் தலைநகரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எர்ரபாளையம் கிராமத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் அவர் பேசியதாவது:அமராவதி தலைநகருக்காக 15வது நாளாக விவசாயிகள் போராடும் நிலையில் இந்த அரசு விவசாயிகளின் வேதனையை கண்டு கொள்ளாமல் உள்ளது. விஷன் 2020 திட்டத்தின்படி, அப்போது ஐதராபாத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டேன். தற்போது ஐதராபாத் சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரமாக திகழ்ந்து வருகிறது. அங்கு மைக்ரோசாப்ட் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கொண்டு வந்தேன். அதன் மூலமாக பல்லாயிரம் பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால், அமராவதி பகுதியில் வெள்ளம் வரும். இந்த மண் சரியில்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். எனது வீட்டை கூட வெள்ளநீரில் மூழ்கடிக்க  முயன்றனர். அமராவதி தலைநகரை கிராபிக்ஸ் தலைநகரம் என்று ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். ₹10 ஆயிரம் கோடி செலவு செய்து இங்கு பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இவை எதுவும் அவர்களின்து கண்களுக்கு தெரியவில்லையா? உலகில் வேறு எங்காவது மூன்று தலைநகர் உள்ளதா என்பதை காண வேண்டும். விஜயவாடா, குண்டூர் மத்தியில் தலைநகர் அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பம். சுதந்திரம் வந்த பிறகு எத்தனையோ முதல்வர்கள் வந்துள்ளனர். ஆனால், யாராவது தலைநகரை மாற்றினார்களா? மாநில பிரிவினைக்கு பிறகு நிதி பற்றாக்குறையில் இருந்த நிலையில் விவசாயிகள் தானாக முன்வந்து 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கினர். அப்படிப்பட்ட அமராவதி திட்டத்தை முடக்க தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 5 கோடி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். அமராவதி தலைநகரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இளைஞர்கள், பெண்கள்,  விவசாயிகளிடம் உள்ளது. எனவே அனைவரும் சேர்ந்து போராட வர வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு பேசினார்.

‘வளையலை கழற்றி கொடுத்த புவனேஸ்வரி
போராட்டத்தில் சந்திரபாபுவின் மனைவி புவனேஸ்வரி பேசுகையில், `அமராவதி தலைநகரம் எனது கணவரின் கனவாக இருந்து வந்தது. இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது என்று நாங்கள் கூறினாலும், அவர் கவலை கொள்ளமாட்டார். விவசாயிகள் அவர் மீது உள்ள நம்பிக்கையால் தங்கள் நிலத்தை வழங்கினர். எனவே, அவர் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து சந்திரபாபுவும், எங்கள் குடும்பத்தினரும் துணையாக இருப்போம் என்றார். பின்னர், புவனேஸ்வரி தான் அணிந்திருந்த தங்க வளையல்களை தலைநகருக்காக போராடக்கூடிய விவசாயிகளின் நீதிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறி வழங்கினார்.


Tags : capital ,Amravati ,Chandrababu Amravati Capital ,Chandrababu , 5 crore people, defend ,Amravati capital, Chandrababu
× RELATED மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு