×

உபி.யில் ஹெல்மெட் இன்றி பயணம் பிரியங்காவுக்கு பதில் நானே அபராதத்தை செலுத்துவேன்: ஸ்கூட்டர் உரிமையாளர் அறிவிப்பு

லக்னோ: `பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச் சென்றதால் விதிக்கப்பட்ட அபராதத்தை நானே செலுத்துவேன்’ என ஸ்கூட்டரின் உரிமையாளர் அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரி கைது செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 28ம் தேதி  வந்தார். அவருக்கு அங்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அவரது வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காங்கிரஸ் தொண்டர் தீரஜ் குர்ஜார் என்பவருடன் ஸ்கூட்டரில் ஏறி பிரியங்கா தப்பிச் சென்றார். அப்போது பிரியங்காவும், ஸ்கூட்டரை ஓட்டிய தீரஜும் ஹெல்மெட் அணியவில்லை. இதையடுத்து, கடந்த 29ம் தேதி ஸ்கூட்டரின் உரிமையாளர் ராஜ்தீப் சிங்குக்கு ₹6,300 அபராதம்  விதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது.

இது தொடர்பாக ராஜ்தீப் சிங் நேற்று கூறுகையில், `லக்னோ பாலிடெக்னிக் பகுதியில் நான் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தீரஜும் பிரியங்காவும் அங்கு நின்றிருந்தனர். அப்போது, தீரஜ் எனது ஸ்கூட்டரை தருமாறு கேட்டார். பெரிய குடும்பத்தை சேர்ந்த பிரியங்காவுக்காக கேட்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. உடனே, எனது ஸ்கூட்டரை கொடுத்தேன். ஹெல்மெட் இன்றி சென்றதற்காக அவர்களுக்கு விதிக்கப்பட்ட ₹6,300 அபராதத் தொகையை, ஸ்கூட்டரின் உரிமையாளர் என்ற வகையில் நானே செலுத்துவேன். இந்த தொகையை பிரியங்காவிடமோ அல்லது காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ நான் பெறமாட்டேன்,’’ என்றார்.



Tags : Priyanka , Priyanka,travels,without helmet , UP
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்