கேரள சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிரும் அவலம்: நீதிபதி ஹேமா ஆணையம் அதிர்ச்சி அறிக்கை

திருவனந்தபுரம்: ‘மலையாள  சினிமாவில் வாய்ப்புகளுக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய  நிலையில் உள்ளனர்,’ என நீதிபதி ஹேமா ஆணையம் கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.பிரபல மலையாள நடிகை கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில் காரில் கடத்தி பலாத்காரம்  செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது  முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியது  மலையாள முன்னணி நடிகரான திலீப் என்பது தெரிய வந்தது. அவரையும்  போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில்  மலையாள சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லை உட்பட பல நெருக்கடிகளுக்கு  ஆளாவது தெரிய வந்தது. இதற்கிடையே, ‘டபிள்யுசிசி’ எனும் மலையாள சினிமா பெண்  கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதில், நடிகைகள் ரம்யா நம்பீசன், ரேவதி,  பாவனா உட்பட பல முன்னணி நடிகைகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இந்த அமைப்பினர் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து, மலையாள  சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக  பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்தனர். அதன்படி, நீதிபதி ஹேமா தலைமையில் நடிகை சாரதா உட்பட 3 பேர்  கொண்ட விசாரணை ஆணையத்தை கேரள அரசு அமைத்தது. நாட்டிலேயே சினிமா  நடிகைகளின் பிரச்னைகளை கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது இதுவே  முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை ஆணையம் மலையாள  சினிமாவில், நடிகர், நடிகைகள், பெண் கலைஞர்களிடம் நேரடியாக விசாரணை  நடத்தியது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் அறிக்கையை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் நேற்று முன்தினம் நீதிபதி  ஹேமா வழங்கினார். அதில் பல்வேறு  திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த விவரம் வருமாறு: மலையாள  சினிமாத் துறையில் நடிகைகள் உட்பட பெண் கலைஞர்கள் பல்வேறு கொடுமைகளை  சந்தித்து வருகின்றனர். தங்களுக்கு உடன்படாத நடிகைகளுக்கு மறைமுகமாக தடை  விதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சில குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.  படத்தில் யார் நடிக்க வேண்டும்? யார் நடிக்கக் கூடாது என்பதை அவர்கள்தான்  தீர்மானிக்கின்றனர்.

பல முன்னணி நடிகைகளும் கூட இதில் இருந்து தப்ப  முடியாது. இப்போதும் சில முன்னணி நடிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  படப்பிடிப்பு தளங்களில் மது, போதை மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு  வருகின்றன. சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் நடிகைகள் படுக்கையை  பகிர்ந்து ெகாள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். நாங்கள் சில நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களிடம்  விசாரித்தபோது அவர்கள் பேசவே அச்சப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘தனிச்சட்டம் வேண்டும்’
நீதிபதி ஹேமா ஆணையம்  தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், ‘நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உள்ளிட்ட  குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தனியாக ஆணையம் அமைக்க  வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு  விலக்கி வைக்க இதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். சினிமாத் துறையினருக்கு  என தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடுமையான சட்டத்தின் மூலமே இதுபோன்ற  பிரச்னைகளை தீர்க்க முடியும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Actresses ,Justice Hema Commission ,cinema world ,shock report Actresses ,Kerala , Actresses share,bed , pain, Kerala cinema ,Justice Hema,Commission shock report
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...