×

தமிழகத்தில் முதன்முறையாக மணிமுத்தாறில் சோலார் படகு இயக்கம்

அம்பை: நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவிக்கென சிறப்பிடம் உண்டு. குற்றாலத்திற்கு அடுத்தபடியாக மணிமுத்தாறு, பாபநாசத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வாடிக்கை. அதிலும் மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் எப்போதும் கூட்டம் அலைமோதும். சீசன் இல்லாத காலத்திலும் சுற்றுலா பயணிகள் நேரடியாகவே மணிமுத்தாறு அருவியை நாடி வருவதுண்டு. மணிமுத்தாறு பகுதியை சூழலியல் சுற்றுலாதலமாக மாற்றிய வனத்துறை, அங்கு சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ரூ.1.8 கோடி செலவில் புதிய சாலையை மாதக்கணக்கில் அமைத்து வருகிறது. இதன் விளைவாக மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வது தடைப்பட்டுள்ளது. சாலை பணிகள் தாமதம் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தின் கண்டனத்திற்கும் வனத்துறை உள்ளாகியது. இந்நிலையில் மணிமுத்தாறை மீண்டும் பழையபடி சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இன்று புத்தாண்டு முதல் பயணிகள் மணிமுத்தாறின் அருவிச் சூழலை அனுபவிக்கும் வகையில் படகு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மார்ச் மாதம் மும்பையில் இருந்து ரூ.50 லட்சம் செலவில் சூரிய ஒளியால் இயங்கும் சோலார் படகு வாங்கப்பட்டு, மணிமுத்தாறு வந்து சேர்ந்தது. அந்தப் படகினை மணிமுத்தாறு செக் போஸ்டுக்கு எதிரே நிறுத்தியிருந்தனர். இந்த படகில் ஒரே சமயத்தில் 25 பேர் அணையை ரசித்துக் கொண்டே பயணிக்க முடியும்.
தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி சோலார் படகு இயக்கத்தை வனத்துறையினர் தள்ளி வைத்தனர். இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் தற்போது 115 அடி தண்ணீர் உள்ளது. எனவே சோலார் படகு பயணத்தை தொடங்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்து, இன்று (1ம்தேதி) புத்தாண்டு முதல் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். நேற்று வனவர் முருகேசன் தலைமையில் படகு பயணத்திற்கான சோதனை ஓட்டம் நடந்தது.
இன்று மணிமுத்தாறு அணையில் அம்பை புலிகள் காப்பக துணை இயக்குநர் கொம்மு ஓம் காரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏற்கனவே சாலை போடும் பணி தாமதமாவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

தமிழகத்திலேயே முதன் முறையாக சோலார் படகு மணிமுத்தாறு அணையில் இயக்கப்பட்டது, சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படகில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்ற்றிருந்தன. சுற்றுலா பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் மட்டுமின்றி, சோலார் மின்சாரம் தடைபட்டால் 6 பேட்டரிகள் மூலம் படகு இயங்கிட வழிமுறைகளும் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாபநாசம் காரையாறு அணையில் பாணதீர்த்தம் அருவி வரை படகு இயக்கப்பட்டது. அப்போது குடும்பத்தோடு படகு சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக படகு சவாரி தடைப்பட்ட சூழலில் மணிமுத்தாறு அணையில் சோலார் படகு இயக்கம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர் படகில் செல்ல ரூ.110 கட்டணமாகும். 12 வயதுக்குட்பட்ட சிறியவர்களுக்கு படகு கட்டணம் ரூ.55. படகில் செல்லும் போது செல்பி எடுத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

Tags : time ,Tamil Nadu , Solar boat
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான...