×

சுகாதாரமற்ற பானி பூரி கடைகளால் உடல்நல கேடு: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வேலூர்: சுகாதாரமற்ற முறையில் இயங்கி வரும் பானிபூரி கடைகளால் பொதுமக்களின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் மாலை நேரங்களில் நொறுக்குத்தீனி கடைகளில் மக்கள் மொய்ப்பது பேஷனாகி வருகிறது. தள்ளுவண்டி பானிபூரி கடைகள், பீப் பக்கோடா, சிக்கன் பக்கோடா, சூப் வகைகள் உட்பட நொறுக்குத்தீனி கடைகள் பெருகி வருகின்றன. அதேபோல் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள ஏராளமான வடமாநிலத்தவரும் மர ஸ்டாண்டுகளில் மண் பானையில் மசாலா ரசமுடன், பானிபூரியை நனைத்து கொடுக்கும் கடைகளும் பெருகியுள்ளன. அங்கு விற்கப்படும் சிறுவடிவ பூரி எந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலான இடங்களில் பழைய எண்ணெயில் தயாரித்திருப்பது அதன் வாசனையிலேயே தெரிந்துவிடுகிறது. இருப்பினும் பலர் அதனை சுவைப்பது வேதனையான விஷயம். உடல்நலத்துக்கு கேடு விளையும் என தெரிந்தாலும் அவற்றின் ருசியால் அத்தகைய உணவு பண்டங்களை நாட வைக்கிறது.

உணவு பாதுகாப்பு சட்டப்படி உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள், மளிகை கடைகள், குளிர்பான கடைகள், பங்க் கடைகள், ஓட்டல்கள், சிறிய அளவிலான ஓட்டல்கள், சிற்றுண்டி கடைகள், இனிப்பு, கார பலகார கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்துமே உரிய உரிமம் பெற வேண்டும். அதோடு இங்கு அவ்வபோது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி உணவு பாதுகாப்பு சட்டவிதிகள்படி பண்டங்கள் தயாரிக்கப்படுகிறதா? என்பது உட்பட விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது தள்ளுவண்டி கடைகளுக்கும், பிளாட்பாரங்களில் வடமாநிலத்தவர்களால் நடத்தப்படும் பானி பூரி கடைகளுக்கும் பொருந்தும்.

ஆனால், வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் வடமாநிலத்தவர்கள் பானைகளில் ரசம், பூரி வைத்து விற்கும் கடைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கல்லூரி, பள்ளி வாசல்களில் வடநாட்டவர்களின் பானி பூரி கடைகளில் விற்கப்படும் பானி பூரியின் தரம் கேள்விக்குறியே. பழைய சுண்டல், ரசம், கெட்டுப்போன எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரிகளை கொண்டு தயாரிக்கப்படும் பானி பூரியில் மாணவர்களை தொடர்ந்து வரவழைக்கும் வகையில் ரகசிய பொருட்களும், அஜினமோட்டா போன்ற ரசாயன உப்பும் கலக்கப்படுவதாகவும், இது நிச்சயம் மாணவர்களின் உடல் நலனை பாதிக்கும் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல்கள், கடைகள் என அடிக்கடி ஆய்வு நடத்தும் நிலையில், இதுபோன்ற கடைகளை ஏன் கண்டுகொள்வதில்லை? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷிடம் கேட்டபோது, ‘அந்த கடைகளிலும் விரைவில் ஆய்வு நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

Tags : shops ,Bani Puri , Bani Puri
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி