×

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரும் வழக்கை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரும் வழக்கை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற விடுமுறைக்கால பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலை நடத்தாமல் தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என சட்ட பஞ்சாயத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.  இந்நிலையில் மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில்,” உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலை நடத்தாமல் கிராமப்புற தேர்தலை நடத்தி அந்த முடிவுகளை மட்டும் வெளியிட்டால், அது நகர்ப்புறத்தில் தேர்தலை நடத்தும் போது வாக்காளர்களை குழப்பத்திற்கு உண்டாக்கும். மேலும் தேர்தலும் சட்ட விதிகளின் அடிப்படையில் சரியான முறையான நடைபெறாது. அதனால் நகர்ப்புற அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்திய பின்னர் ஒட்டுமொத்தமாக அனைத்து முடிவுகளையும் வெளியிட வேண்டும். அதுவரை தற்போது நடத்தப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி முடிவுகளை வெளியிட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரும் வழக்கை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

Tags : Supreme Court ,election , Local election
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...