×

தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் தென்காசி ரயில் நிலையம் பொலிவு பெறுமா?

தென்காசி: தென்காசி ரயில் நிலையத்திற்கு பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் நிலையில் ரயில் நிலையத்தின் சுகாதாரத்தை பராமரிப்பதில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி ரயில் நிலையம் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரே ஜங்ஷன் ரயில் நிலையமாகும். அதாவது தென்காசியிலிருந்து செங்கோட்டை, கொல்லம், தென்காசியில் இருந்து மதுரை வழியாக சென்னை, தென்காசியிலிருந்து பாவூர்சத்திரம் வழியாக திருநெல்வேலி என மொத்தம் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் தென்காசி - திருநெல்வேலி வழித்தடத்தில் 6 பயணிகள் ரயில்களும், தென்காசி - மதுரை வழித்தடத்தில் 6 பயணிகள் ரயிலும், தென்காசி செங்கோட்டை வழித்தடத்தில் 16க்கும் மேற்பட்ட ரயில்களும், தென்காசி - சென்னை வழித்தடத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தென்காசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இவ்வளவு அதிகமான பயணிகள் வந்து செல்லும் தென்காசி ரயில் நிலையத்தில் வெளிப்பகுதி சுகாதாரமின்றி முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. ரயில் நிலையத்தின் கீழ் பகுதி முழுவதும் முட்செடிகள் நிறைந்து காணப்படுவதுடன், ரயில் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையின் செப்டிக்டேங்க் பழுதடைந்த நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. முட்செடிகளை பயன்படுத்தி பன்றிகளும் கால்நடைகளும் நிறைந்து காணப்படுகிறது. இதுதவிர ரயில் நிலையத்தின் உட்பகுதியிலும் வடபுறத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதியிலும் ஏராளமான முட்செடிகள் புதர்போல் மண்டி காணப்படுகிறது.

தென்காசி ரயில் நிலைய பராமரிப்பு கடந்த பல ஆண்டுகளாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு இரண்டரை லட்ச ரூபாய் சுகாதாரம் வகைக்காக தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது ஆண்டு ஒன்றுக்கு ரூ.30 லட்சம் சுகாதாரத்தை பராமரிப்பதற்காக தென்காசி ரயில் நிலையத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. இவ்வளவு அதிகமான தொகை வழங்கப்படும் நிலையிலும் சுகாதாரம் என்பது தென்காசி ரயில் நிலையத்தில் கேள்விக்குறியாகவே உள்ளது. ரயில் நிலையத்தின் நடைமேடை பகுதி ஓரளவு நன்றாக பராமரிக்கப்படும் நிலையில் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி, கீழ்பகுதி, வடபகுதி உள்ளிட்ட இடங்கள் முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் தென்காசி ரயில் நிலையத்தை சுற்றிலும் காணப்படும் முட்செடிகளை அகற்றி அழகுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரயில் நிலைய சுகாதார ஆய்வாளரிடம் கேட்டபோது, முட்செடிகள் அகற்றுவது குறித்து பலரும் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். தென்காசி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படும் ரயில் நிலையத்தை அழகுபடுத்துவதில் அலட்சியம் காண்பிக்காமல் ரயில்வே நிர்வாகம் உடனடியாக செயல்பட வேண்டும் என்று ரயில்வே பயணிகள் நலச் சங்கத்தினர், பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Tags : railway station ,Tenkasi ,Tenkasi Railway Station , Tenkasi Railway Station
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!