×

நோய்வாய்ப்பட்டு இறந்த ஆதரவற்ற இந்து மூதாட்டியை நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்கள்

அதிராம்பட்டினம்: வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பெருமை, இந்தியாவின் பலம். இங்கு பல மொழிகள் பேசப்படுகிறது. பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்களும், பல மதங்களை தழுவிய மக்களும் வாழ்ந்து வந்தபோதிலும் இவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இன்றைக்கும் வாழ்கிறார்கள் என்பதே இந்தியாவின் சிறப்பு. இந்த மனித நேயம் இன்றைக்கும் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்ததுள்ளது.அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி(75) உறவினர்கள் யாரும் இல்லை. சொத்து, சுகம் என்ற சொல்லவும் ஆள் இல்லை. அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று அவர் இறந்தார்.

தேவிக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. எனவே உடலை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.இதை அறிந்த அதிராம்பட்டினம் கிரசன்ட் பிளட் டோனட் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் செய்யது அகமது கபீர் ஆரிப் மற்றும் நைனா, ஹஸன் ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அந்த மூதாட்டியின் உடலை பெற்று அந்த மூதாட்டி இந்து மதத்தைச் சோ்ந்தவர் என்பதால் இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர். இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக ஒருபுறம் நாடே போர்க்களமாக பற்றிஎரியும் நிலையில் தமிழகத்தின் ஒரு சிறு நகரில் இருந்து மனிதநேயம் என்னும் அக்னி குஞ்சு புறப்பட்டிருப்பது அதிராம்பட்டினம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Islamists , Buried
× RELATED ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை...