×

அகத்தியர் தரிசனத்திற்காக பொதிகைமலை செல்ல அனுமதி: கேரள வனத்துறை அழைப்பு

வி.கே.புரம்: பொதிகை மலையிலுள்ள அகஸ்தியரை வழிபடச் செல்ல கேரள வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் 6350 அடி உயரத்தில் அமைந்துள்ளது பொதிகை மலை. இந்த மலையின் உச்சியிலுள்ள அகஸ்தியர் சிலையை வழிபட பக்தர்கள் கடந்த 2008ம் ஆண்டு வரை முண்டந்துறை, பாணதீர்த்தம், இஞ்சிக்குழி, பூக்குளம் வழியாக சென்று வந்தனர். புலிகள், யானைகள், ராஜநாகம் உள்ளிட்ட அரியவகை, ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இது இருப்பதால் இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 2009ம் ஆண்டு முதல் தமிழக வனத்துறை தடை விதித்தது.

இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவு ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பமாகிறது. சிவராத்திரியை தொடர்ந்து ஏப்ரல் வரை பேக்கேஜ் டூர் போன்று அனுமதி வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்கான அனுமதியை பெறலாம். இந்த ஆண்டிற்கான டூரில் பொதிகை மலை செல்ல விரும்புகிறவர்கள் ரூ.1100 செலுத்தி கேரள வனத்துறையில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக உள்ள இணைய தளத்திலோ அல்லது வட்டியூர் காவு வனத்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து சென்று வரலாம். 10 நபர்கள் அடங்கிய குழுவாகவும் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு வரும் 8ம்தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதே அடையாள அட்டையைத்தான் பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும்.

Tags : darshan ,Agathiyar ,Kerala Forest Department , The Mountain of the Pottery
× RELATED கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது