×

ஆடல், பாடலுடன் உற்சாகம்: குமரியில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்... தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நாகர்கோவில்: குமரியில் நள்ளிரவில்  புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 2019ம் ஆண்டு முடிவடைந்து, 2020ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று மாலையில் இருந்தே தொடங்கின. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக  சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அங்குள்ள லாட்ஜூகளில் அறைகள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டு இருந்தன. நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உணவு திருவிழா, நடன போட்டி, பாடல் போட்டி உள்பட பல்வேறு விதமான போட்டிகளை நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நள்ளிரவு 12 மணி பிறந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். வாண வேடிக்கைகளும் கோலாகலமாக இருந்தன. இரவு 12 மணியளவில் சாலையில் சென்றவர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கன்னியாகுமரி சன்னதி தெரு, கடற்கரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நள்ளிரவு வரை நின்று புத்தாண்டை வரவேற்றனர். நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. புத்தாண்டு பிறப்பையொட்டி, தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கோட்டார் சவேரியார் பேராலயம், திருத்துவபுரம் பேராலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று இரவு 10.30க்கு புத்தாண்டு பிரார்த்தனைகள் தொடங்கின.

நள்ளிரவு 12 மணி பிறந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ. தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. ஆலயங்கள் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. புத்தாண்டையொட்டி நேற்று இரவில் இருந்தே  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடைபெற்றது. எஸ்.பி. நாத், அதிரடிப்படையினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ் போன்றவற்றை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலம் உள்பட  மாவட்டம் முழுவதும் 25 முக்கிய சந்திப்புகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

சுமார் 1500 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக, எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்தார். புத்தாண்டையொட்டி இன்று காலை முதல் சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி, சுசீந்திரம், சொத்தவிளை, சங்குதுறை, திற்பரப்பு, பத்மநாபபுரம் அரண்மனை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று இரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் பலர் போக்குவரத்து விதிகள் மீறி வந்து சிக்கினர். அவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கினர்.

எஸ்.ஓ.எஸ். செயலியை பயன்படுத்த வேண்டும்
எஸ்.பி. ஸ்ரீநாத் கூறுகையில், 2020ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும். 2019ம் ஆண்டில் விபத்துக்கள் குறைந்துள்ளன. 2020ம் ஆண்டு விபத்து இல்லாத ஆண்டாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டோம். அதி வேகமாக வாகனங்களை இயக்க மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் ஆபத்துக்களை தவிர்க்க எஸ்.ஓ.எஸ். செயலியை தொடர்பு கொள்ள வேண்டும். சுற்றுலா தலங்களில் பெண்களிடம் அத்துமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புத்தாண்டு நாளில் போராட்டமா?
புத்தாண்டை கொண்டாடும் வகையில் முக்கிய சந்திப்புகளில் திரளும் இளைஞர்கள், அதை நள்ளிரவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்திலும் முக்கிய சந்திப்புகளில் நேற்று போலீசார் கண்காணித்தனர். கொண்டாட்டம் என்ற பெயரில் யாராவது மத்திய அரசை எதிர்த்து கோஷமிடுகிறார்களா? என்பதை கண்காணித்தனர். இன்றும் முக்கிய சந்திப்புகளில் தொடர்ந்து கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : New Year's Eve ,New Year ,Kumari Dance ,churches ,Kumari , Kumari, New Year Celebration, Kolakalam
× RELATED யுகாதி புத்தாண்டு திருநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து