×

கைகாட்டி பகுதியில் சாலையில் உலா வந்த காட்டுமாடு: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

ஊட்டி: ஊட்டி - மஞ்சூர் சாலையில் கைகாட்டி பகுதியில் உலா வந்த காட்டுமாடு மிரண்டு ஓடியதில் அங்கிருந்த பயணிகள் அலறியடித்தப்படி ஓட்டம் பிடித்தனர். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் உலா வருகின்றன. சில சமயங்களில் ஒற்றை கட்டுமாடு குடியிருப்பு பகுதிகள், நகர பகுதிகளில் சாலைகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு அவற்றை வனத்திற்குள் விரட்டுவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இந்நிலையில் குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட கைக்காட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய வயது முதிர்ந்த காட்டுமாடு ஒன்று காலை 8.30 மணியளவில் ஊட்டி - மஞ்சூர் சாலையில் உலா வந்தது. காலை நேரம் என்பதால் கைக்காட்டி பகுதியில் ஏராளமானோர் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது காட்டுமாடு கைகாட்டி பஜார் பகுதிக்குள் வருவதை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் வாகனங்கள் வருவதை பார்த்த காட்டுமாடு மிரண்டு ஓடியது. இதை பார்த்த பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அங்கிருந்த குந்தா வன ஊழியர்கள் காட்டெருமையை வனத்திற்குள் விரட்டினார்கள். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : road ,Travelers ,Kaikatti ,Kaikatti on the Road , Road, wilderness, travelers
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது