×

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்: மாநிலங்களின் தீர்மானம் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: மத்திய  அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய  அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்  இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்படும் என கேரள அரசு அறிவித்தது. இந்த நிலையில் நேற்று  காலை 9 மணியளவில் சட்டப்பேரவை கூடியது. கூட்டத்தில், 118 விதியின் கீழ் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை  முதல்வர்  பினராய் விஜயன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு  அமல்படுத்தியதால் நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. பல்கலைக்கழகம்,  கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்பட அனைவரும் கடுமையான போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

மத அடிப்படையிலான இந்த பிரிவு சர்வதேச அளவில் நமது  நாடு குறித்த தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது. உலகம் முழுவதும்  வசிக்கும் கேரளாவை சேர்ந்த மக்கள் இந்த சட்டத்தால் கவலை அடைந்துள்ளனர். இந்த  சூழ்நிலையில் தான் இந்த சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம்  நிறைவேற்ற தீர்மானித்தோம். பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் மதச்சார்பற்ற  கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள  இந்த சட்டத்தால் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே எந்த காரணம்  கொண்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. ஏதாவது ஒரு மதத்தினருக்கு  கட்டுப்பாடும், ஏதாவது ஒரு மதத்தினருக்கு குடியுரிமைக்கு கூடுதல் முன்னுரிமையும் வழங்குவது நமது நாட்டின் மதச்சார்பின்மைக்கு கேடு விளைவிக்கும். எனவே தான்  இந்த சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். என்று அனைவரும் ேகாரிக்கை விடுக்கின்றனர். மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவமாகும். குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற காரணத்தை கூறி அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுவது ஜனநாயக நாட்டுக்கு உகந்தது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர்  காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள்  பேசினர். தீர்மானத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து பாஜ உறுப்பினர் ஓ. ராஜகோபால் பேசியதாவது: குறுகிய அரசியல்  லாபத்திற்காக இந்த சட்டத்தை தவறாக சித்தரிப்பது நமது நாட்டுக்கு எந்த  நன்மையும் ஏற்படுத்தாது. அரசியல் வேறு, நாடு  வேறு. அரசியலில் தற்காலிக லாபத்திற்காக சிலர் உண்மைகளை மறந்து  விடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தான் இங்கே வசிக்க  வேண்டும் என்று யாரும் கூறவில்லை. பாஜ அரசு ெகாண்டு வந்துள்ள இந்த சட்டம்  முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பொய்யான தகவலை பரப்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஓ.ராஜகோபால் எதிர்ப்புக்கு இடையே  தீர்மானம் நிறைவேறியது. இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுபற்றி திருவனந்தபுரத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம்  நாடாளுமன்றத்துக்கு தான் உள்ளது. எந்த மாநில சட்டப்பேரவைக்கும் இதற்கான  அதிகாரம் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் ஒட்டுமொத்தமாக நாட்டுடன்  பிணைக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு இந்திய முஸ்லிம்களுடன் எந்த தொடர்பும்  இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளை சேர்ந்த  முஸ்லிம்களுக்கு மட்டுமே தொடர்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்லைன் முறையில் குடியுரிமை
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கம், பீகார், உபி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் மாநில அரசுகளின் தலையீட்டை தடுக்க ஆன்லைன் மூலம் குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் யோசித்து வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், `மாவட்ட கலெக்டர் மூலம் குடியுரிமை வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதை மாற்றி நேரடியாக மத்திய அரசே ஆன்லைன் மூலம் குடியுரிமை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் குடியுரிமைக்ககான விண்ணப்பம் பெறுதல், ஆவணங்களை ஆய்வு செய்தல், ஆன்லைன் முறையில் குடியுரிமை வழங்கும் முறையை மாவட்ட கலெக்டருக்கு பதில் புதிய அதிகாரி மேற்கொள்வார்’ என்றார்.

Tags : Kerala Assembly ,Citizenship Amendment Act Citizenship, Amendment Act ,Resolution ,Revocation , Citizenship, Amendment Act, Revocation, Kerala Legislature, Resolution passed
× RELATED சட்டசபை பேச்சை புத்தகமாக அச்சடித்து...