×

திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க 1089 கோடி நிதி : 18 மாதங்களில் பணிகள் முடிக்க அரசு உத்தரவு

சென்னை: திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க 1089 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டுமானத்தை 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் வரும் 2021-2022ம் நிதியாண்டில் 75 புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைதொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் சார்பில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. தற்போது கூடுதலாக தமிழகத்தில்  திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மற்றும் நாகை  3 மருத்துவக்கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, 195 கோடி மத்திய அரசும், 325 கோடி மாநில நிதியிலும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 21.42 ஏக்கரில் 385.63 கோடி செலவில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் 60 ஏக்கரில் 366.85 கோடி செலவில் மருத்துவ கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்டம் பொல்லப்பள்ளியில் 25 ஏக்கரில் ₹336.95 கோடியில் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் 3 மருத்துவ கல்லூரிகளின் முதற்கட்ட கட்டுமான பணிக்கு 240 கோடி தமிழக அரசு சார்பில் விடுவித்துள்ளது. அதன்படி, நாகையில் மருத்துவகல்லூரி கட்டுமான பணிக்கு 119 கோடியும், மருத்துவமனை கட்டுமான பணிக்கு 123 கோடியும், தங்கும் விடுதி மற்றும் குடியிருப்பு கட்டுமான பணிக்கு 124 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரிக்கு 113 கோடியும், மருத்துவமனைக்கு 120 கோடியும், விடுதி மற்றும் குடியிருப்பு கட்டுமான பணிக்கு 104 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி 143 கோடியும், மருத்துவமனைக்கு 165 கோடியும், விடுதி மற்றும் குடியிருப்புக்கு 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கட்டுமான பணிக்கு விரைவில் டெண்டர் விடப்படுகிறது. இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘6 மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படுகிறது. மேலும், 3 மருத்துவக்கல்லூரிக்கு விரைவில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த 9 மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா 150 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு, அங்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படுகிறது’ என்றார்.


Tags : Krishnagiri ,Nagai ,colleges ,Tiruvallur , 1089 crores , start 3 medical colleges , including Tiruvallur, Nagai and Krishnagiri
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்