×

கோர்ட்டில் உறுதியளித்தபடி ஆணையம் விதிகளை கடைப்பிடிக்கிறதா என வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினர் கண்காணிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: கோர்ட்டில் உறுதியளித்தபடி மாநில தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிகை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறதா தொண்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.  இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் தரப்பின் முறைகேடுகளை முறியடிக்கவும், வாக்குப்பதிவின்போது நடத்தவிருக்கும் தில்லுமுல்லுகளை தடுத்திடவும் திமுக அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், “ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் ஒரே பெட்டியில் போடப்பட்டு இருப்பதால் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்பதே மனுவின் முக்கிய அம்சமாகும். மேலும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். சிசிடிவி கேமரா மூலம் அனைத்து நடைமுறைகளையும் கண்காணிக்க வேண்டும். வாக்குப்பெட்டிகளை வாக்குகள் எண்ணும் வரை பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த வழக்கு 2019 டிசம்பர் 30 அன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார். அப்போது 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த முறைகேடுகள், அண்மையில் அதிமுக ஆட்சி நடத்திய கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் நடந்த விதிமீறல்களை சுட்டிக்காட்டி வாதங்களை வைத்தார். திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் சட்டத்தின்படி அமைந்தவைதான் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்து, அதற்கான சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கினை முடித்து வைத்துள்ளது. இதற்கிடையே ஜனவரி 2ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில், ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், “குறுகிய கால அவகாசமே இருப்பதால் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய முடியாது” என தெரிவித்தார்.

குறுக்கிட்ட நீதிபதிகள், “வீடியோ பதிவுக்கு 2 நாட்கள் அவகாசம் போதாதா? ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது? தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்’’ என தெரிவித்ததுடன், வீடியோ பதிவு  குறித்து தேர்தல்  ஆணையரிடம் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதியளித்த மாநில தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய அவகாசம் இல்லை என தெரிவித்திருப்பதில் இருந்து அதன் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகிறது. இதனால் மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பாக செயல்படுகிறதா? ஆளுங்கட்சியின் தலையாட்டி பொம்மையாக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன்வந்து விசாரித்த வழக்கில் 30.12.2019 அன்று நீதியரசர்கள் வேல்முருகன் மற்றும்  தரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் இரு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட காட்சிகளை சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை அதிகாரியின் கையெழுத்து மற்றும் சீல்- உடன் 3.1.2020  மாலை 5 மணிக்குள் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பெறப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் அடங்கிய பதிவினை நீதிமன்ற பதிவாளர் தன் பாதுகாப்பில்  வைத்துக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேர்மையாக நடத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவு மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களுக்கு பொருந்தும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இந்த 14 மாவட்டங்களுக்கான உத்தரவு மீதமுள்ள 13 மாவட்டங்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய இடத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும், முகவர்களும் இருக்கிறார்கள். உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என கவனித்து, ஆளுந்தரப்பின் அத்துமீறல்கள், முறைகேடுகளை தடுத்திட வேண்டியது அவசியமாகும். திமுகவின் சட்டத்துறை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும். உயர் நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கையை மக்களின் தீர்ப்பும் நிச்சயம் நமக்கு வழங்கும். புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற தீர்மானம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: கேரள சட்ட பேரவையில் முதல்வர் பினராய் விஜயன், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும்  என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது. ஆகவே வருகின்ற ஜனவரி 6ம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Commission ,Court ,Volunteers ,MK Stalin , Letter , DMK Stalin, Volunteers
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...