×

காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 40 வாக்குப்பெட்டிகளில் சீல்வைத்த உறைகள் பிரிப்பு: அதிகாரிகளுடன் ஏஜென்ட்கள் கடும் வாக்குவாதம்

காரைக்குடி: காரைக்குடியில் வாக்குப்பெட்டிகளை சுற்றி சீல் வைக்கப்பட்டிருந்த உறை பிரிக்கப்பட்டிருந்ததாக கூறி அதிகாரிகளுடன் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை மற்றும் கல்லல் ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை வெள்ைளத்துணியால் சுற்றி சீல் வைத்து, காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களான அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஏஜன்ட்கள் வந்தனர். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, 40 வாக்குப்பெட்டிகளை சுற்றி வைத்திருந்த வெள்ளைத்துணியிலான சீல் வைக்கப்பட்ட உறை பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் வந்தனர். தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘எந்த பஞ்சாயத்துக்கான வாக்குப்பெட்டிகள் அவை என்பதில் எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதனால் உறைகளில் இருந்த சீல்களை மட்டும் அகற்றி, தகவல் சிலிப்களை ஆய்வு செய்தோம்’’ என்று ஏஜன்ட்களிடம் கூறினர். ஆனால் தங்கள் முன்னிலையில்தான் சீலை அகற்றி வாக்குப்பெட்டிகளை ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் கட்சி ஏஜன்ட்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிவகங்கை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன் ஐஏஎஸ், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் வாக்குப்பெட்டிகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சங்கராபுரம் ஒன்றிய கவுன்சில் திமுக வேட்பாளர் சொக்கலிங்கம் கூறுகையில், ‘‘40க்கும் மேற்பட்ட வாக்குப்பெட்டிகளின் உறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்குப்பெட்டிக்குள் மை தெளிக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இது குறித்து சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்தில் சாக்குப்பையில் இருந்து, பெட்டிகளை மட்டும் அறையில் வைத்து, அறை சீல் வைக்கப்படும். சாக்குப்பைகளும், பையுடனான அட்டையும் தனியாக வைக்கப்படும். அவ்வாறு பிரித்து வைக்கப்பட்டிருந்த பைகள் மற்றும் அட்டையை பார்த்து பெட்டிகளில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எந்த முறைகேடும நடக்கவில்லை. அனைத்து வாக்குப்பெட்டிகளும் சீலிடப்பட்டு முறையாக இருந்தது. எந்த முறைகேடும் இல்லை என்றார்.

எருமை மாட்டிடம் திமுகவினர் மனு
கடலூர் மாவட்டம் முஷ்ணம் ஒன்றியத்தில் நடந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு ெபட்டிகள் நேற்று முன்தினம் முஷ்ணம் சி.எஸ்.ஜெயின் தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும் என திமுக ஒன்றிய செயலாளர் தங்க.ஆனந்தன் தலைமையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றனர். அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால், தேர்தல் அதிகாரியை கண்டித்து எருமை மாட்டிடம் அந்த மனுவை அளித்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தின் சுவரில் நோட்டீசை ஒட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Separation ,Counting Center ,Center ,agencies ,Karaikudi Voting ,Envelope Separation , Voting Counting, 40 Ballot Boxes, Sealed, Envelope Separation in Center
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!