அமைச்சர் பதவி கிடைக்காததால் சிவசேனாவில் வெடித்தது பூகம்பம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிலும் போர்க்கொடி

மும்பை: அமைச்சர் பதவி கிடைக்காததால் சிவசேனாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கட்சித் தலைமை மீது தங்களது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவிக்க தொடங்கியிருப்பதால் கட்சியில் பூகம்பம் வெடித்துள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிலும் அமைச்சர் பதவி கிடைக்காத தலைவர்களின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் கூட்டணி அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மூன்று கட்சிகளையும் சேர்ந்த 33 பேரும், சுயேச்சைகள் 3 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் அமைச்சராவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல தலைவர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கபடவில்லை. இது அந்த தலைவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் கோபமுறச் செய்துள்ளது.

முந்தையை பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சிவசேனா மூத்த தலைவர்களான ராம்தாஸ் கதம், திவாகர் ராவ்தே, தீபக் கேசர்கர், ரவீந்திர வாய்க்கர், சுனில் பிரபு உள்ளிட்ட 12 பேருககு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் கட்சித் தலைமை மீது கடும் கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் ராம்தாஸ் கதம் கடும் அதிருப்திக்குள்ளாகி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று காங்கிரஸ் கட்சியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக அஸ்லாம் ஷேக் மற்றும் விஸ்வஜித் கதம் ஆகியோர் அமைச்சராக்கப்பட்டதற்கு மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். .

இதற்கிடையே, தேசியவாத காங்கிரசிலும் சில மூத்த தலைவர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத வருத்தத்தில் உள்ளனர். பா.ஜனதா ஆதரவாளராக மாறி பின்னர் கட்சிக்கு திரும்பிய அஜித் பவாருக்கு மீண்டும் துணை முதல்வர் வழங்கப்பட்டிருப்பது ஜெயந்த் பாட்டீல் போன்ற மூத்த தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது. இப்படி ஏகப்பட்ட பேர் அதிருப்தி அடைந்துள்ளதால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அந்தந்த கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிவசேனா தலைவர்களில் முக்கியமானவரான சஞ்சய் ராவுத் தனது தம்பிக்கு அமைச்சர் பதவி தராததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தனக்கு அதுபோன்ற எந்த அதிருப்தியும் இல்லை என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>