×

சாவில் மர்மம் விலகியது நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பாதிப்பால் தான் இறந்துள்ளார்: நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம்: பிரபல  நடிகர் கலாபவன்மணி சாவில் நீடித்து வந்த மர்மம் தற்போது விலகி உள்ளது. இது  தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல்  செய்துள்ளது. அதில் கல்லீரல் பாதிப்பால் தான் கலாபவன் மணி இறந்தார் என்று  குறிப்பிடப்பட்டு உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக  இருந்தவர் கலாபவன் மணி. தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் நடித்த  ஜெமினி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும்  பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு  கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து கொச்சி அரசு  மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது  உடலில் மீத்தைல் ஆல்கஹால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலாபவன் மணி  இறப்பதற்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மது விருந்தில்  கலந்து கொண்டார். ஆகவே யாராவது மதுவில் விஷம் வைத்து கொன்று இருக்கலாமோ?  என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு  செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில்  கலாபவன் மணிக்கு ஏற்கனவே கல்லீரல் பாதித்து இருந்தது என்றும், அளவுக்கு அதிகமாக  மது அருந்தியது தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரியவந்தது. இருப்பினும்  அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும்  கலாபவன் மணியின் தம்பி மற்றும் உறவினர்கள் உள்பட பலரும் கேரள அரசுக்கு  கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கை  சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சிபிஐ விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை அறிக்கையை தற்போது எர்ணாகுளம்  தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.இதில் பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில்  மர்மம் எதுவும் இல்லை. அவருக்கு ஏற்கனவே கல்லீரல் நோய் பாதிப்பு  இருந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் நோய் தீவிரமடைந்து மரணம்  ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags : Kalabhavan Mani ,CBI ,court , Actor Kalabhavan ,Mani,liver death,CBI report, court
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...