×

ரூ.60 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பு: 6 மாதத்தில் ஏர் இந்தியாவுக்கு மூடுவிழா

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க யாரும் முன் வராவிட்டால், அந்த நிறுவனம் இன்னும் 6 மாதத்தில் மூடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது. நஷ்டத்திலிருந்து ஏர் இந்தியாவை மீட்க மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்தும் அது பலன் தரவில்லை. ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் அரசின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. எனினும் பங்குகளை விற்கும் முயற்சியை மத்திய அரசு தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து இயக்க முடியாததால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இன்னும் 6 மாதத்தில் மூடு விழா நடத்தி விடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதுள்ள சூழலில் 6 மாதங்கள் வரை மட்டுமே ஏர் இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடியும். பங்குகள் விற்பனை நடந்தால் மட்டுமே மேற்கொண்டு ஏர் இந்தியா தொடர்ந்து இயங்கும். இந்தாண்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டது. ஏர் இந்தியாவை பொறுத்தவரை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும். தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கிடையில் எந்தவொரு நிதி உதவியும் கிடைக்காததால், கடனில் மூழ்கியுள்ள விமானத்தை அரசாங்கம் விட்டுச் செல்கிறது.

தற்போது நிலைமையின்படி நிறுவனத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் வாங்குபவர் ஒருவர்கூட வரவில்லை என்றால், நாங்கள் கடையை மூட வேண்டியிருக்கும். 2018-19ம் ஆண்டில், ஏர் இந்தியாவின் நிகர இழப்பு தற்காலிகமாக ரூ.8,556.35 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, மொத்தம் ரூ.60,000 கோடி கடனில் உள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் கூட்டு நிறுவனமான ஐசாட்ஸில் கேரியரின் பங்குகளை விற்பதற்கான செயல்முறைகளை மீண்டும் தொடங்க ஏர் இந்தியாவுக்கு ‘ஐசாம்’ ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Air India , Air India
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...