×

பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் மளமளவென உயர்ந்தது: உபரிநீர் திறக்க வாய்ப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் மளமளவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டுகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந் ஆகஸ்ட் மாதம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழை காணமராக அணை முழுகொள்ளளவான 105 அடியை எட்டியதால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 105 அடியில் இருந்து 104.41 அடியாக சரிந்தது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், தற்போது அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டுகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 104.95 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 1,779 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : dam ,Bawanisagar , Bhavanisagar
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்