×

2019ல் பொருளாதார வீழ்ச்சி, இந்தித் திணிப்பு, நீட் நெருக்கடிகள்.. பிறக்கும் புத்தாண்டு, புதிய ஒளியைக் கூட்டட்டும் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

சென்னை : தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் ஆண்டாக 2020 அமையும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கிலப்  புத்தாண்டை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிட்டார். ஆட்சி மாற்றத்திற்கான முன்னொட்டக் காட்சியாக மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதை நினைவுக் கூர்ந்த ஸ்டாலின், அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவின் வெற்றி தொடரும் என்று அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

 2019-ஆம் ஆண்டு முற்றுப்பெற்று 2020-ஆம் ஆண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டு, புதிய ஒளியைக் கூட்டட்டும்; புதிய சிந்தனையைத் தரட்டும்; புத்துணர்வு ஏற்படுத்தட்டும்; புதுவாழ்வு மலரட்டும் என்ற எனது நம்பிக்கை கலந்த நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்பார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட மனித வாழ்க்கையே ஒரு தொடர் ஓட்டம் போன்றது. அந்தத் தொடர் ஓட்டமானது தொய்வில்லாமல் இனிமையாகத் தொடர்ந்தால்தான் மனித வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும். அதற்கு ஒவ்வோர் ஆண்டும் மனிதனுக்கு முக்கியமானது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டும் முக்கியமானதே. 2020 ஆம் ஆண்டும் முக்கியமானதே!

 ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்பார்கள். வயதொன்று கூடுவது மட்டுமா வாழ்க்கை? ஆண்டொன்று போனால் வாழ்வின் மெருகு கூட வேண்டும். அதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையாக அமையாமல், பொதுநலம் கலந்த வாழ்க்கையாக அமைய வேண்டும். தனக்காக மட்டும் வாழாமல் மற்றவர்களுக்காகவும் சேர்த்து வாழும் வாழ்க்கையாக அமைய வேண்டும். மனிதன் தானாகப் பிறக்கவில்லை, அதனால் அவன் தனக்காக மட்டுமே என்று வாழக்கூடாதவன் என்றார் தந்தை பெரியார். அத்தகைய பொதுநலச் சிந்தனையுடன் அனைவரும் வாழவேண்டும்.

பொதுவாக, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடக்க இருப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பார்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டாலே, அடுத்து நடக்க இருப்பவை நல்லவையாக இருக்காது. நடந்தவற்றில் எது தவறானதோ அது சரி செய்யப்பட்டால்தான், அடுத்து நடக்க இருப்பவை நல்லவையாக அமையும். அந்த வகையில் கடந்த ஆண்டு, நாட்டில் நடந்த கசப்புகள் சரி செய்யப்பட வேண்டும்.  

கடந்த ஆண்டில் மத்திய, மாநில அரசுகளால் ஏற்பட்ட கசப்புகள் அதிகம். பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை, காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இந்தித் திணிப்பு, தமிழ்ப் புறக்கணிப்பு, நீட் நெருக்கடிகள் என்று மத்திய அரசின் தவறான நிலைப்பாடுகள் ஒரு பக்கம். மாநிலத்திலோ அடிமைத்தனமான ஒரு முதலமைச்சர் இருந்து கொண்டு எந்தத் தரப்புக்கும் நன்மை செய்யாத, எந்த தரப்பும் மனநிம்மதி அடையாத ஓர் ஆட்சியாக இது தொடர்கிறது. 2019 ஆம் ஆண்டில் இரண்டு அரசுகளாலும் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் அதிகம். குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாக 2020 ஆம் ஆண்டு அமைய இருக்கிறது.

அதற்கான முன்னோட்டக் காட்சிகளை இந்த ஆண்டே அறிய முடிந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளிலும் வென்று காட்டியது தி.மு.க. மக்கள் மத்தியில் தி.மு.க பெற்றுள்ள நம்பிக்கையின் அடையாளம் இது. இந்த மக்கள் எழுச்சியானது அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர இருக்கிறது. ஆண்டு மாற்றம், ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளத்தை அமைக்க இருக்கிறது.

இந்தியச் சமூகம் காலம்காலமாக காப்பாற்றி வந்திருக்கும் சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, மனிதநேயம் ஆகிய மாண்புகளை எந்நாளும் காக்க உறுதி ஏற்போம். சமூக மாண்புகளும் சட்ட நெறிகளும் எந்த சக்திகளாலும் வீழாமல் இருக்க அரணாக நிற்போம். அறம் சார்ந்த வாழ்க்கை கொண்ட சமூகத்தைச் சமைப்போம். சமரசமற்ற அரசியல் பயணத்தைத் தொடர்வோம்.

2020-ஆம் ஆண்டு அனைவர்க்கும் நன்மை செய்விக்கும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : downturn ,Stalin ,birth ,DMK ,DMC , DMK, Stalin, Report, 2020, People of Tamil Nadu
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்...