கால்வாய் பகுதிக்கு சென்று சப்- கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு: சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர் வரவில்லை... குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

சின்னசேலம்: சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை தண்ணீர் வராததால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் நீர் வரும் கால்வாயை சீரமைக்க கள்ளக்குறிச்சி சப் கலெக்டர் ஸ்ரீகாந்த்,  உதயசூரியன் எம்எல்ஏ, பொதுப்பணித்துறை, வனத்துறை  அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலத்தில் நீரை தேக்கி வைப்பதன் மூலம் சின்னசேலம் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த ஏரி கடந்த 3 ஆண்டுகளாகவே கடும் மழை காலத்திலும் நிரம்பாமல் வறண்டு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கோமுகி அணையிலிருந்து சின்னசேலம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் தூர்ந்து போய் புதர்மண்டி கிடப்பதே ஆகும்.

இந்த சின்னசேலம் ஏரிக்கு நீர் வரும் கால்வாயை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பொக்லைன் மூலம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு பொதுப்பணித்துறையும், விவசாயிகளும் இந்த நீர்வரத்து கால்வாயை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்தும் சின்னசேலம் ஏரியில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. அதுமட்டுமல்லாமல் கோமுகி அணை கால்வாயிலிருந்து கடத்தூர் வரை கால்வாய் பகுதி வன பகுதியில் வருகிறது. இந்த கால்வாய் தூர்ந்து போய் மிகவும் குறுகியும், மண் மேடாகவும், இடையில் பாறையும் உள்ளது. இதை சீரமைக்க வனத்துறை அனுமதி தர மறுக்கிறது. இதனால் கால்வாய் இருந்தும் போதிய அளவு நீர்வரத்து இல்லாமல் தடைபடுகிறது.

இதனால் சின்னசேலம் ஏரி கோடி ஓடி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது கோமுகி அணையில் இருந்து வரும் நீர் கடத்தூர், தெங்கியாநத்தம், ஏரிகள் நிரம்பி பைத்தந்துறை ஏரி கோடி ஓடுகிறது. இன்னும் தென்செட்டியந்தல், சின்னசேலம் ஏரிகள் நிரம்பவில்லை. இந்த நிலையில் அணையில் இருந்து வரும் நீரையாவது சின்னசேலம் ஏரிக்கு வரவைப்பதன் மூலம் சின்னசேலம் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம் என எண்ணிய சின்னசேலம் பகுதி சமூக ஆர்வலர்கள், வணிக பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் சேர்ந்து இணையும் கைகள் என்ற அமைப்பை உருவாக்கி பைத்தந்துறை புதூர் ஏரி கால்வாயிலிருந்து சின்னசேலம் ஏரிவரை உள்ள 15 கிலோமீட்டர் தூர பாசன கால்வாயை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சுமார் ரூ. 60லட்சம் மதிப்பில்  சீரமைத்தனர். இருப்பினும் கடத்தூர் வனப்பகுதியில் உள்ள புதர் மண்டி மண்மேடாக கிடக்கும் 2கிலோமீட்டர் கால்வாயை சீரமைத்தால் தான் சின்னசேலம் ஏரிக்கு நீர் வரும் என்ற நிலை உள்ளது.

 இதையடுத்து வனப்பகுதியில் உள்ள கால்வாயை சீரமைக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்று சின்னசேலம் பகுதி முக்கிய பிரமுகர்கள் கலெக்டர் கிரண்குராலா, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், உதயசூரியன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து நேற்று மதியம் கள்ளக்குறிச்சி சப்கலெக்டர் ஸ்ரீகாந்த், சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ உதயசூரியன், வனசரகர் செந்தூர சுந்தரேசன், பொதுப்பணித்துறை செயற்பொறி
யாளர் மணிமோகன், உதவி பொறியாளர் பிரபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோமுகி அணையில் இருந்து கடத்தூர், சின்னசேலம் ஏரிக்கு நீர் பிரியும் கால்வாய் பகுதியில் உள்ள மதகில் இருந்து ஆய்வு செய்தனர். அப்போது சின்னசேலம் பகுதி மக்கள் கடத்தூர் வனப்பகுதியில் உள்ள 2கிலோமீட்டர் கால்வாயை மண் அள்ளி சீரமைக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்படி சீரமைத்தால்தான் சின்னசேலம் ஏரிக்கு நீர் வரும் என்றனர். அதை பரிசீலனை செய்வதாக சப் கலெக்டர் உறுதி அளித்தார். பின்னர் வனப்பகுதியில் உள்ள மண் மேடான சின்னசேலம் ஏரிக்கு நீர்வரும் கால்வாயை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர், சப் கலெக்டர், மாவட்ட வன அலுவலர், எம்எல்ஏ அடங்கிய குழுவினர் சேர்ந்து ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முடிவெடுத்தனர். அப்போது அதிகாரிகளிடம் சின்னசேலம் பகுதி முக்கிய பிரமுகர்கள் சின்னசேலம் பகுதி மற்றும் தென்செட்டியந்தல் உள்ளிட்ட வழியோர கிராம மக்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Tags : Chinna Salem ,lac ,zone ,Sous-collecteur , Canal, sous-collecteur, député, inspection, lac ChinnaSelam,
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ