×

நித்தமும் நடக்கும் அடிதடி: அடாவடி ஊழியர்களை வைத்து செயல்படும் கிருஷ்ணகிரி டோல்கேட்... வாகன ஓட்டிகள் பீதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட்டில் ரவுடிகள் போன்று அடாவடியாக செயல்படும் ஊழியர்களால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். இந்த டோல்கேட்டை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே டோல்கேட் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே அதிக வாகனங்கள் கடந்து செல்லும் டோல்கேட்டாக இது உள்ளது. இந்த டோல்கேட்டில் நாள்தோறும் அடிதடி நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. இங்கு பணியில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலானோர், குடிபோதையில் ரவுடிகளை போல் செயல்பட்டு வருகின்றனர். பெண் ஊழியர்களும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், அடிதடியில் இறங்கும் செயல்களும் அடிக்கடி நடந்து வருவதால், டோல்கேட்டை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 19ம் தேதி, இந்த டோல்கேட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் பகுதியை சேர்ந்த அசோக்(28) என்ற லாரி டிரைவரிடம், அங்கு பணியில் இருந்த பர்கூர் அடுத்த கொட்டிலேட்டி கிராமத்தை சேர்ந்த செண்பகவள்ளி(29) என்பவர் லாரியை நிறுத்தி, சுங்க கட்டணம் கேட்டுள்ளார். அப்போது, ஏடிஎம் கார்டில் தனது ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்வதில் தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த செண்பகவள்ளி, ஸ்வைப்பிங் மிஷினால் அசோக்கின் மண்டையை உடைத்தார்.
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, லாரி ஓட்டுநர்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி டிஎஸ்பி குமார், பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார். ஆனால், அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், டிரைவர் அசோக் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன், ஓசூரிலிருந்து தனது குடும்பத்தினருடன் காரில்  வந்த ஒருவர் பாஸ்டேக்கில் பணம் இல்லை எனக்கூறி, பணத்தை கொடுத்து சுங்கக்கட்டணத்தை செலுத்திய போது, அங்கிருந்த பெண்ணுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த டோல்கேட் ஊழியர்கள் அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கிருந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நடந்து வரும் அட்டகாசத்தை போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரவுடிகளை கொண்டு டோல்கேட் கட்டணம் வசூல் செய்யும் இந்த டோல்கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,Nadaadi ,Aadavadi ,Krishnagiri Tollgate , Aditi, Krishnagiri Tolgate
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...